ARTICLE AD BOX
நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், காளியம்மாள் நாதக பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியில் கடந்த சில நாட்களாகவே என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அனைத்து மர்மமாகவே இருந்து வருகிறது. அந்த கட்சியில் இருந்து பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் சீமான் மீது குற்றச்சாட்டை முன்வைத்து அடுத்தடுத்து விலகி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணிப் பாசறை ஒருங்கிணைப்பாளர்களும், சிறப்பான பேச்சாளருமான காளியம்மாள். இவர் நாம் தமிழர் கட்சி சார்பில் வடசென்னை மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளராகவும், பூம்புகார் பகுதியில் எம்.எல்.ஏ. வேட்பாளராகவும் போட்டியிட்டார். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் இவரது பேச்சும், பிரச்சாரமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் காளியம்மாளை பிசிறு என்று விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விரைவில் வேறு கட்சியில் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதை காளியம்மாள் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே அடுத்த மாதம் நடக்கும் நிகழ்ச்சியின் அழைப்பிதழில் நாதக பொறுப்பை குறிப்பிடாமல் காளியம்மாள் பெயர் இடம்பெற்றுள்ளது வைரலாகி வருகிறது.

அதில், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நாதக காளியம்மாள் ஒரே மேடையில் ஏறுகிறார். உறவுகள் சங்கமத்தில் பங்குபெறும் அரசியல் பிரபலங்களின் பெயர் தங்கள் கட்சியின் பெயர், பொறுப்புகளுடன் இடம்பெற்றுள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சியில் பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் பெயர் மட்டும் சமூக செயற்பாட்டாளர் என இடம் பெற்றுள்ளது.

நாதக பொறுப்புகளில் இருந்து காளியம்மாள் விலகியுள்ளதால் அவர் தன்னை சமூக செயற்பாட்டாளர் என அடையாளப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அழைப்பிதழில் நாம் தமிழர் பொறுப்புடன் பெயர் இல்லாதது குறித்த கேள்விக்கு காளியம்மாள் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். கட்சி சார்பற்ற நிகழ்ச்சி என்பதால் நாதக பொறுப்புடன் பெயரை அச்சிடவில்லை என காளியம்மாள் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.