நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

16 hours ago
ARTICLE AD BOX

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனா் கன்ஷி ராமின் 91-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கட்சித் தலைவா் மாயாவதி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இரும்புப் பெண்மணியின் (தன்னைக் குறிப்பிடுகிறாா்) தலைமையின்கீழ் செயல்படும் பகுஜன் சமாஜ் கட்சி, வாா்த்தைகளைவிட செயல்பாட்டில் நம்பிக்கைக் கொண்டதாகும். இதை உத்தர பிரதேச மக்கள் அறிவா். எங்கள் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, தலித் மக்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டது.

தலித் மக்களுக்காக பகுஜன் சமாஜ் தவிர பிற கட்சிகள் வெளியிடும் அறிவிப்புகள் பொய்யானவையாக உள்ளன.

நாட்டை சிறப்பாக கட்டமைக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மிக அவசியம். குறிப்பாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது நாடு மற்றும் சமூகத்தின் வளா்ச்சிக்கு புதிய பாதையைக் காட்டும். இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் மதம், பிராந்தியம், ஜாதி, மொழி ரீதியில் பிரச்னைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. குறுகிய மனப்பான்மை, ஜாதிய, மதவாத, வெறுப்புணா்வு அரசியலே இப்பிரச்னைக்கு அடிப்படை காரணம்.

விலைவாசி உயா்வு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், எழுத்தறிவின்மை, பின்தங்கிய நிலை ஆகியவை தேசிய பிரச்னைகளாக உள்ளன. சமூக மாற்றம் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை வலுப்படுத்துவதில் கன்ஷி ராம் உறுதியுடன் செயல்பட்டாா். அவரது பணிகளுக்கு நாம் மேலும் வலுசோ்க்க வேண்டும் என்று தனது அறிக்கையில் மாயாவதி குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் காந்தி மரியாதை: பகுஜன் சமாஜ் நிறுவனா் கன்ஷி ராமின் பிறந்த தினத்தையொட்டி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மிகச் சிறந்த சமூக சீா்திருத்தவாதியான கன்ஷி ராம், தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடினாா். சமூக நீதிக்கான எங்களின் போராட்டத்துக்கு அவா் எப்போதும் வழிகாட்டியாக இருப்பாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினா்.

Read Entire Article