ARTICLE AD BOX
ஜோதிர்லிங்கங்கள் சிவபெருமானின் ஒளியில் இருந்து தோன்றியவை. இந்தியாவில் 64 ஜோதிர் லிங்கங்கள் இருந்தாலும் அதில் 12 ஜோதிர் லிங்கங்கள் சிறப்பு வாய்ந்தவை. அந்த 12 ஜோதிர்லிங்கங்களை பற்றி சுருக்கமாக இங்கு காண்போம்.
1. சோமநாத் ஜோதிர்லிங்கம்
குஜராத் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சோம்நாத் லிங்கம் முதல் ஜோதிர்லிங்கமாக அங்கீகரிக்கப்பட்டது. சந்திரன் இங்குள்ள ஜோதிர் லிங்கத்தை வழிபட்டு சாபம் நீங்கினார். எதிரிகளின் படையெடுப்பால் இந்த கோயில் பல முறை இடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மீண்டும் மீண்டும் பலமுறை கோயில் கட்டப்பட்டது.
2. மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம்
இக்கோயில் கிருஷ்ணா நதிக்கரையில் ஸ்ரீசைலம் மலையில் அமைந்துள்ளது. இக்கோயில் பல புராண சிறப்புகளை பெற்றுள்ளது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடப்பட்ட திருத்தலமாகும். விநாயகருக்கு இங்கு தான் திருமணம் நடைபெற்றது. நந்திதேவர் இக்கோயிலில் தவமிருந்துதான் இறைவனை சுமக்கும் பேறு பெற்றுள்ளார்.
3. மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம்
மிகச்சிறப்பு பெற்ற இக்கோயில் பழமையான உஜ்ஜயினி நகரில் அமைந்துள்ளது. இங்குள்ள மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் தெற்கு நோக்கிய ஒரே ஜோதிர்லிங்கமாக உள்ளது. மக்களுக்கு துன்பம் கொடுத்த வேதாளத்தை அழிக்க இங்கு மஹா காலேஸ்வரராக சிவபெருமான் தோன்றினார். வேதாளத்தை அழித்த பின்னர் ஜோதிர்லிங்கத்தில் ஐக்கியமானார்.
4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம்:
நர்மதா நதிக்கரையில் இந்தூருக்கு அருகிலுள்ள மால்வா பகுதியில், ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இது பானாசுரன் இறைவனை வழிப்பட்ட தலமாகும்.
5. கேதார்நாத் ஜோதிர்லிங்கம்:
இமயமலை தொடரில் உள்ள கேதார் மலையில் அமைந்துள்ளது கேதார்நாத் ஜோதிர்லிங்கம். இங்கு தான் பார்வதி ஈசனின் இடப் பாகத்தைப் பெற்றார். மேலும் சம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரம் பாடப்பெற்ற புகழ்பெற்ற தலமாகும்.
6. பீமாசங்கர் ஜோதிர்லிங்கம்:
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் சஹ்யாத்ரி மலைத்தொடர்களில் அமைந்துள்ள பீமாசங்கர் ஜோதிர்லிங்கமும் புகழ் பெற்றது. இங்கு சிவபெருமான் தோன்றி பீமன் என்கிற அசுரனை அழித்தார்.
7. காசி விஸ்வநாத லிங்கம்:
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பாவங்களைப் போக்கும் கங்கை நதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாத ஜோதிர்லிங்கம் மிகவும் உயர்வானது. காசி ஹிந்து மதத்தின் புனித பூமியாக விளங்குகிறது. ஹிந்துக்களின் இறுதிகாலம் காசியில் கழிவது பெரும் பேறாக பார்க்கப்படுகிறது. உலகில் முதலில் தோன்றிய இடமாகவும் , முதல் வழிபாடு தோன்றியதும் இந்த இடத்தில் தான் என்றும் சமய அறிஞர்கள் கருதுகிறார்கள். காசி தான் உலகின் மிகப் பழமையான நகரம். இங்குள்ள ஜோதிர் லிங்கத்தை தரிசித்தால் மனிதனின் மொத்த பாவமும் நீங்கும் என்பது நம்பிக்கை.
8. திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம்:
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், கோதாவரி நதி உற்பத்தி ஆகும் பிரம்மகிரி மலையில் உள்ள திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்க ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள ஜோதிர்லிங்கத்தில் மும்மூர்த்திகளின் உருவம் பதிந்துள்ளது.
9. வைத்தியநாத ஜோதிர்லிங்கம்:
ஜார்க்கண்டின் தியோகரில் அமைந்துள்ள வைத்தியநாத ஜோதிர்லிங்கம் இராவணனால் வணங்கப்பட்ட சிறப்பு வாய்ந்தது. இராவணன் இங்கு பத்து தலைகளை வெட்டிக் கொண்ட போது இறைவன் தோன்றி அவனுக்கு வைத்தியம் செய்த சிறப்பு பெற்றது.
10. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம்:
இது குஜராத்தில் துவாரகாவில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கம். தாருகன் என்ற அரக்கன் சுப்ரியா என்கிற சிவபக்தையை சிறைப்பிடித்ததை அறிந்த சிவபெருமான் அவனை அழித்து விட்டு ஜோதிர்லிங்கத்தில் ஐக்கியமானார்.
11. ராமேஸ்வர ஜோதிர்லிங்கம்:
தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஜோதிர்லிங்கம் இது. ஶ்ரீராமரால் வழிபாடு செய்யப்பட்ட பெருமை பெற்றது.
12. கிருஷ்டேஸ்வர ஜோதிர்லிங்கம்:
மகாராஷ்டிராவின் சம்பாஜி நகரில் உள்ள இக்கோயிலில் பார்வதிதேவி ஜோதிர் லிங்கத்தை குங்குமப்பூவால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார்.