நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு

15 hours ago
ARTICLE AD BOX

நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் தலா 10 பெட்டிகளைக் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு சாா்பில் கடந்த ஆண்டு ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து இந்த ரயிலுக்கான என்ஜின் மற்றும் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கடந்தாண்டு தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன.இது குறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது:

வழக்கமான ரயில்களைப் போலல்லாமல், ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயில்களால் சுற்றுச்சூழல் மாசு ஆகாது. உலகளவில் ஜொ்மனி, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் போன்ற பிற எரிபொருளால் இயங்கும் ரயில்கள் போன்று புகையை வெளியிடாமல், ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் ரயில்கள் தண்ணீரை மட்டுமே வெளியிடும். இதன்மூலம் காா்பன் உமிழ்வு இருக்காது.

ரூ.80 கோடி: மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் ரயில்களில் அதிகபட்சம் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் ரயிலில் 10 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அந்தவகையில் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பயன்பாட்டில் உள்ள ஹைட்ரஜன் ரயில் என்ஜின்களை விட, அதிக ஆற்றல் கொண்ட அதாவது 1,200 குதிரை சக்தி(எச்.பி) திறன் கொண்ட என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கமுடியும். மொத்தம் 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 8 பெட்டிகளில் 2,500 பயணிகள் பயணிக்க முடியும். மீதமுள்ள 2 பெட்டிகளில் ஹைட்ரஜன் எரிபொருள் சேகரித்து வைக்கப்படும். இதில் ஒரு ஹைட்ரஜன் ரயிலை முழுவதுமாக தயாரிக்க குறைந்தது ரூ.80 கோடி செலவாகும்.

80 சதவீதம்: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கி. மீ. தூரத்துக்கு இயக்கப்படவுள்ளது.

தற்போது இந்த ரயிலை தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் இந்த மாதம் இறுதிக்குள் முடிவடைந்து சோதனை ஓட்டத்துக்கு ரயில் அனுப்பப்படும். ஏப்ரல் மாத இறுதிக்குள் ஹைட்ரஜன் ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

Read Entire Article