ARTICLE AD BOX
லக்னோ,
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், ரேபரேலி தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பர்கட் சருரா பகுதியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வரும் தலித் மாணவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "நாட்டின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களின் தலைமை பதவிகளில் தலித்துகள் யாராவது இருக்கிறார்களா?" என்று ராகுல் கேட்டார். அதற்கு ஒரு மாணவர், "இல்லை" என்று பதிலளித்தார்.
இதற்கு ராகுல் காந்தி, "ஏன் இல்லை?" என்று கேட்டபோது, "போதிய வசதிகள் இல்லாததே காரணம்" என்று மற்றொரு மாணவர் கூறினார். அதனை மறுத்த ராகுல் காந்தி, "அம்பேத்கரிடம் எந்த வசதியும் இருந்ததில்லை. ஆனால் அவர் நாட்டின் அரசியலையே அசைத்துவிட்டார்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "உங்களுக்கு எதிராக, நீங்கள் முன்னேறுவதை விரும்பாத ஒரு அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு உங்களை தினமும் தாக்குகிறது. சிலநேரம் அது உங்களை எப்படி தாக்குகிறது என்பதைக் கூட நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அரசியலமைப்பின் சித்தாந்தம்தான் உங்கள் சித்தாந்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் தலித்துகள் இல்லையென்றால், அரசியலமைப்பு சட்டம் கிடைத்திருக்காது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். இது உங்கள் அரசியலமைப்பு சட்டம். ஆனால் இப்போது நாட்டின் அமைப்புகளால் தலித் மக்கள் நசுக்கப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.