ARTICLE AD BOX
கிரிக்கெட் இன்றைய காலகட்டத்தில் மதிப்பு மிக்க விளையாட்டாக பார்க்கப்படுகிறது. இதனை மேலும் மெருகூட்டுவதற்கு அவ்வப்போது விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. அவ்வகையில் இன்றைய கால நவீன கிரிக்கெட்டில், பல விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே உள்ளன. இதனால் தான் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் எளிதாக துரத்திப் பிடிக்கின்றனர். இந்நிலையில் 'நாங்கள் ஆடிய கிரிக்கெட் இதுவல்ல' என சமீபத்தில் தெரிவித்தார் சச்சின் டெண்டுல்கர்.
கிரிக்கெட்டை மேலும் சுவாரஸ்யமாக மாற்றுவதற்கு ஐசிசி அவ்வப்போது விதிகளை மாற்றி வருகிறது. அதிரடி ஆட்டம் மேலோங்கி நிற்பதற்கு இதுவும் ஒரு காரணம். இதில் பாதிக்கப்படுவது என்னவோ பௌலர்கள் தான். பவுண்டரி எல்லையில் ஃபீல்டர்கள் நிற்பது முதல் பந்துகளை மாற்றுவது வரை சில விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாகவே உள்ளன. இதனால் தான் பேட்ஸ்மேன்கள் தைரியமாக சிக்ஸ் அடிக்க முயற்சிக்கின்றனர். இது ரன் வேட்டை உயர்த்துமே தவிர, பாரம்பரியமான கிரிக்கெட்டை அழித்து விடும் என கிரிக்கெட் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
முன்பெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸிற்கு ஒரு வெள்ளை நிறப் பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 50 ஓவர்கள் வரைக்கும் ஒரே பந்து என்பதால், டெத் ஓவர்களில் நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். ஆனால் இன்றோ ஒரு இன்னிங்ஸிற்கே இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே இல்லாமல் போய் விட்டது. இதனால் தான், நாங்கள் அப்போது ஆடிய கிரிக்கெட்டே வேறு என கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஒருநாள் கிரிக்கெட்டில் 2 பந்துகளைப் பயன்படுத்தத் தொடங்கியது முதல் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே மிகவும் அரிதாகி விட்டது. அப்போதெல்லாம் 45 ஓவர்களுக்கு மேல் பந்து நன்றாக ஸ்விங் ஆகி வரும். ஆனால் இப்போது ஒரு பந்தில் வெறும் 25 ஓவர்களே வீசப்படுவதால், ஸ்விங் ஆவதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன. அதோடு ஒரே பந்து பயன்படுத்தப்பட்ட போது, கடைசி ஓவர்களில் பந்தின் நிறமும் மங்கி விடும். இதனால் ஷாட் ஆடுவதற்கு போதிய நேரமிருக்காது.
மேலும் கூடுதலாக ஒரு ஃபீல்டர் பவுண்டரி எல்லையில் நிற்பார். ரன்களைக் குவிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் இன்றைய கிரிக்கெட் விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே உள்ளன. நாங்கள் அப்போது விளையாடிய கிரிக்கெட் இதுவல்ல; அது வேறு. பௌலர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட காலம் அது,” என சச்சின் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டையும் சேர்த்து 100 சதங்களை விளாசியுள்ளார். டென்னிஸ் வீரராக வேண்டும் என ஆசைப்பட்டவர், கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார் என்றால் அது சாதாரண ஒன்றல்ல. அப்பேற்பட்ட சச்சினே இன்றைய நவீன கிரிக்கெட் விதிகள் குறித்து பேசியிருப்பது, கிரிக்கெட் உலகில் கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது. இனி வரும் கிரிக்கெட் விதிகளாவது, பௌலர்களுக்கும் சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.