ARTICLE AD BOX
சினிமாவில் ஒருவர் வெற்றிகரமாக வலம் வர வேண்டுமெனில், முயற்சியோடு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. தொடக்க காலத்தில் சினிமாவில் நுழைந்த பலரும், சிறந்த கதைத் தேர்வின் மூலமாகவே இன்று பெரிய நடிகராக உருவெடுத்திருக்கிறார்கள். அவ்வகையில் தற்போது பெரிய ஸ்டார்களாக தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் ஜொலிக்கிறார்கள். இவர்களின் ஆரம்பகால படத்தைக் கண்ட இயக்குநர் செல்வராகவன், அப்போதே ஒரு விஷயத்தை கணித்திருந்தார். அப்படி அவர் கணித்த விஷயம் என்ன? யாரிடம் சொன்னார் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமானார் நயன்தாரா. கேரளாவைச் சேர்ந்த இவர் கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தார். ஹீரோ இல்லாமல் தன்னிச்சையாக ஹீரோயினால் கூட படத்தை வெற்றிகரமாக எடுத்துச் சொல்ல முடியும் எனக் காட்டியவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நயன்தாரா, தற்போது அவ்வப்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவரின் வெற்றிகரமான சினிமா பயணத்திற்கு காரணமாக பார்க்கப்படுவது சிறந்த கதைகளைத் தேர்வு செய்தது தான். இதே பாணியில் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து கோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகராக ஜொலிக்கிறார் சிவகார்த்திகேயன்.
மெரினா மற்றும் மனங்கொத்திப் பறவை போன்ற படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன், அதன்பிறகு சில படங்களில் துணை நடிகராகவும் நடித்தார். இவரது சினிமா பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த 2 திரைப்படங்கள் எதிர்நீச்சல் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படங்களின் வெற்றிக்குப் பிறகு குழந்தைகளின் ஆஸ்தான நடிகராக கோலிவுட்டில் வலம் வந்தார் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் வெற்றியைப் பெற்றதால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் இவரது படங்களில் ஆல் டைம் பெஸ்ட்டாக அமைந்தது.
விஜய் டிவியில் தொகுப்பாளராகவும், நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றவருமான சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபரிமிதமானது. ஒருகாலத்தில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டவர் தான், இன்று வெள்ளித் திரையில் ஜொலிக்கிறார். நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவருமே தங்களது கடின உழைப்பின் மூலமாகவே கோலிவுட்டில் உச்சத்தில் இருக்கிறார்கள்.
நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் நிச்சயமாக பெரிய நடிகர்களாக வருவார்கள் என இயக்குநர் செல்வராகவன் அப்போதே கணித்திருந்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஐயா படத்தில் நயன்தாராவின் நடிப்பைப் பார்த்த பிறகு, இவர் எதிர்காலத்தில் டாப் ஹீரோயினாக ஜொலிப்பார் என்றேன். எனது தம்பியான நடிகர் தனுஷ் நான் சொன்னதை நம்பவே இல்லை. ஆனால் நான் கணித்தது போலவே நயன்தாரா பெரிய நடிகையாகி விட்டார். அதேபோல் எதிர்நீச்சல் படத்தைப் பார்த்த பிறகு சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலிப்பார் என்றேன். அவரும் இன்று டாப் ஹீரோவாக மாறி விட்டார்” என்று செல்வராகவன் கூறினார்.