ARTICLE AD BOX
பாரதத்தின் தலைநகராக டெல்லியின் வரலாறு மஹாபாரத காலத்தில் இருந்தே துவங்குகிறது. பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தில் இருந்து விலகி காண்டவ பிரஸ்தம் என்ற வனத்தில் குடியேறினர். இந்திரனின் உதவியால் அது இந்திரபிரஸ்தம் என்ற அழகிய நகராக உருவாக்கப்பட்டது. பாண்டவர்களில் கர்ணனின் வம்சத்தை சேர்ந்த அரசர்கள் இந்திரபிரஸ்தாவை ஆட்சி செய்தனர். கிமு 8 ஆம் நூற்றாண்டில் இந்த வம்சத்தை சேர்ந்த புகழ் பெற்ற அரசனாக தில்லி சிறப்பாக ஆட்சி செய்துள்ளார். இவரது பெயரில் தான் இந்திரபிரஸ்தத்தை உள்ளடக்கிய பெரிய நகரமாக தில்லி உருவானது. சில வரலாற்று ஆய்வாளர்கள் தில்லி அரசனை மெளரியர் என்று குறிப்பிடுகின்றனர்.
தில்லி வம்சத்து அரசர்களுக்கு பின்னர் தோமர் ராஜ்புத் வம்ச மன்னர்கள் தில்லியை தலைநகராக கொண்டு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களை ஆட்சி செய்தனர். மன்னர் பிரித்விராஜ் சவுகானின் வீழ்ச்சி வரை, தில்லி ஹிந்து அரசர்களால் ஆளப்பட்டது.
கி.பி 1020 ஆம் ஆண்டில் அனங்கபால் கோட்டை கட்டப்பட்டது. இது புராண லால்கோட் என்றும் அழைக்கப்படுகிறது.கி.பி 1164 இல், மூன்றாம் பிருத்விராஜ் தனது கோட்டையை விரிவுபடுத்தி தில்லி நகரை செம்மைப்படுத்தினார். இவர் காலத்தில் நகரத்திற்கு கிலா ராய் பித்தோரா என்று பெயரிடப்பட்டது. பிரித்விராஜின் ஆட்சிக் காலம் தில்லியின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது.
12 ஆம் நூற்றாண்டின் முகமது கோரி தில்லியை கைப்பற்றினான். கிபி 1206 ஆம் ஆண்டில், அடிமை வம்ச சுல்தான் குதுபுதீன் ஐபக் புராண லால்கோட்டிலிருந்து ஆட்சி செய்யத் தொடங்கினான். அவனுக்கு பின்னர் 13 ஆம் நூற்றாண்டின் கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த ஜலாலுதீன் கில்ஜி தில்லியைக் கைப்பற்றினான். கில்ஜி ஆட்சிக் காலத்தில், மங்கோலியர்கள் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளைக் கொள்ளையடித்தனர். கொள்ளையர்களுக்கு பயந்த அலாவுதீன் கில்ஜி ,தில்லியின் வடகிழக்கில் ஒரு கோட்டை கட்டி ஆட்சி செய்தான். தற்போது இது சிரி கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
கில்ஜி வம்ச அழிவுக்கு பின் தில்லி அதிகாரம் கியாசுதீன் துக்ளக் கைகளுக்கு சென்றது. அவர் தில்லியில் துக்ளகாபாத் என்ற புதிய தலைநகரை நிறுவினார். அங்கு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தலைநகரம் மீண்டும் சிரிக்கு மாற்றப்பட்டது.
முகமது பின் துக்ளக் தில்லி எல்லையை விட்டு வெளியேறி தேவகிரியை புதிய தலைநகராக மாற்றினார்.
1354 ஆம் ஆண்டில் ஃபிரோஸ் ஷா துக்ளக் மீண்டும் தில்லிக்கு திரும்பி ஃபிரோஸ் ஷா கோட்லா என்ற புதிய தலைநகரை உருவாக்கினார். 14 ஆம் நூற்றாண்டில் பெரும் செல்வமிக்க தில்லியை தைமூர் கொள்ளையடித்தான். பின்னர் லோடி, சையது வம்சம் தில்லியை ஆண்டது. பாபர் காலத்தில் தில்லியை முகலாயர் கைப்பற்றினாலும், ஹுமாயூன் காலத்தில் தான் தில்லி மீண்டும் தலைநகர் ஆனது. சில காலம் ஷெர்சாவினால் தில்லி ஆளப்பட்டது. பின்னர் முகலாயர்கள் ஆக்ராவை தலைநகராக மாற்றினர்.
ஷாஜகான் ஆட்சி காலத்தில் 1648 ஆம் ஆண்டில் தில்லியில் செங்கோட்டை கட்டப்பட்டு மீண்டும் தலைநகர் ஆக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் முகலாயர்களை வீழ்த்தி மராட்டியர்கள் தில்லியை கைப்பற்றினர், மராட்டியரின் கீழ் தில்லியை முகலாயர் ஆட்சி செய்தனர். அப்போது ஈரான் சுல்தான் நாதிர்ஷா தில்லியை தாக்கி கோஹினூர் வைரம், தங்க மயில் அரியணை உள்ளிட்ட மிகப்பெரிய செல்வத்தினை கொள்ளைடித்து சென்றான். 1803 ஆம் ஆண்டு தில்லியை கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றியது.1857 ஆம் ஆண்டு மராட்டியர் தலைமையில் தில்லி மீட்கப்பட்டது. ஆயினும் பிரிட்டிஷ் நேரடியாக தில்லியை கைப்பற்றியது. 1912 ஆம் ஆண்டு தில்லியை டெல்லியாக மாற்றி பிரிட்டிஷ்ராஜ் மீண்டும் தலைநகராக்கியது.1947 இல் விடுதலைக்கு பின்னர் இந்தியாவின் தலைநகராக டெல்லி உள்ளது.