ARTICLE AD BOX
நட்பில் ஈகோ பார்ப்பது என்பது அது எந்த தருணத்தில் எந்த அடிப்படையில் என்பதைக் கொண்டுதான் பார்க்கலாமா கூடாதா என்று சொல்ல முடியும். மிக நெருங்கிய நண்பரானாலும் நம் சுயமரியாதை பாதிக்கக் கூடிய ஒரு செயலைச் செய்தால் அப்போது ஈகோ காட்டாமல் நிச்சயம் இருக்க முடியாது. நட்புடன் பழகும்போது ஈகோவை விட்டு விடுவது தான் நட்பை காப்பாற்றும். அது இல்லையென்றால் இழப்புதான் ஏற்படும்.
ஒவ்வொருவருக்கும் ஈகோ இருக்கத்தான் செய்யும். அது சரியான முறையில் பயன்படுத்தப்படும் பொழுது நன்றாக வேலை செய்யும். அதாவது நாம் பாதுகாப் பற்றவர்களாக, பாதிக்கப்படக்கூடியவர்களாக உணரும் சமயத்தில் நமக்கு நம்பிக்கையை அளிக்கும். நட்பில் ஈகோ வெளிப்படுவதற்கான காரணங்கள் பல உண்டு. நாம் பெரும்பாலும் வலுவான சுய உணர்வை கொண்டு உள்ளோம்.
அதை நட்பில் கொண்டு வரும்போது இந்த சுய அடையாளம் மற்றவருடன் ஒப்பிடும். அப்படி ஒப்பிடும்பொழுது அவர்கள் தங்களை எப்படி உணர்கிறார்கள் என்பதை பாதிக்கலாம். இது போட்டி அல்லது ஒப்பீட்டிற்கு வழி வகுக்கும். குறிப்பாக நண்பர்கள் அந்தஸ்துக்காக போட்டியிடும் பொழுது உண்டாகும் ஈகோக்கள் மோதல்களுக்கு வழிவகுக்கும். இதுவே பொறாமை அல்லது போட்டியாக வெளிப்படும். இந்த ஈகோ நிச்சயம் நட்பை கெடுக்கும். சில சமயம் முற்றிலுமாக முறித்துவிடும்.
ஒவ்வொருவருக்குமே கருத்து சுதந்திரம் உண்டு. சிலர் உரையாடும் சமயங்களில் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள் அல்லது மற்றவர்களின் கருத்துக்களை நிராகரித்து ஒரு பதட்டத்தை ஏற்படுத்துவார்கள். தாங்களோ அல்லது தங்களின் கருத்துக்களோ மதிக்கப்படவில்லை என்றால் அவர்களின் ஈகோ பாதிக்கப்படக்கூடும். வலுவான ஈகோ உள்ளவர்கள் தங்கள் சுயமரியாதை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆழமான நட்பை தேர்ந்தெடுக்கமாட்டார்கள். எங்குமே மேலோட்டமாக பழகுவது இவர்களின் சுபாவமாக இருக்கும்.
சில சமயம் நட்பில் உள்ளவர்களின் அதீத வளர்ச்சி அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்தால் நட்பில் பொருத்தமின்மை ஏற்பட்டு ஈகோ தலைதூக்கும். சிலர் தங்களை மிகவும் உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்வதற்கு பாடுபடுவார்கள். இதுவும் நட்பில் விரிசலை ஏற்படுத்தும். உண்மையான நட்பில் ஈகோவுக்கோ, போட்டி பொறாமைக்கோ இடமில்லை. சிலர் தாங்கள்தான் உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள் என்றும், உலகம் தன்னைச் சுற்றியே சுழல்கிறது என்றும் நம்புகிறார்கள். அதனால்தான் மற்றவர்களை மதிப்பதோ, அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பதோ இல்லை. இப்படிப்பட்டவர்களுடன் நட்பில் இருப்பது இயலாத காரியம்.
தங்களைப் பெரிதாக காட்டிக்கொள்ளாமல், தாங்கள்தான் எல்லாம் என்று எண்ணாமல் அதே சமயம் நன்கு பழகும் குணம் கொண்டவர்களுக்கு பெரிதாக ஈகோ ஒன்றும் இருக்காது. இவர்களுடன் பழகுவது ரொம்ப சுலபமாக இருக்கும். நண்பர்கள்தான் வாழ்க்கையில் உண்மையான பொக்கிஷம். இதில் எந்த சந்தேகமும் இல்லைை. ஆனால் எல்லோருமே உண்மையான நண்பராக இருக்க முடியாது. அதனால் நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். நட்பை உருவாக்க தியாகம் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
மற்றவர்களை ஈர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. உண்மையான நட்பிடம் எதிர்பார்ப்பது அன்பு மற்றும் கவனத்தை மட்டுமே. எதையும் எதிர்பார்க்காமல் ஒருவரை ஊக்கப்படுத்துவது, மகிழ்ச்சியான நட்பை நீட்டிக்க தேவையானது ஒரு அழகான மனநிலைதான். ஈகோ இருக்கும் இடத்தில் நட்புகளில் பிரச்சனைகள் அதிகமாகும். இத்தகைய நட்புகளில் பரஸ்பர மரியாதை அல்லது உண்மையான அன்பு இருக்க முடியாது.
நம் வளர்ச்சியைக்காண விருப்பம் உள்ள நபர்களுடன் பழகுவது இனிமையான நினைவுகளை தரும். உண்மைதானே?