ARTICLE AD BOX
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது சிராஜ். இன்றுமுதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அவர் விளையாட இருக்கிறார். அதுபோல் பாலிவுட் நடிகையாக இருப்பவர் மஹிரா சர்மா. இவர் பிக்பால் மூலம் பிரபலமானவர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக இணையதளங்களில் செய்திகள் அவ்வப்போது பரப்பப்பட்டு வருகின்றன. இதற்கு இருவரும் தற்போது இறுதியாக தீர்வு கண்டுள்ளனர். இதுகுறித்து மஹிரா, தனது இன்ஸ்டா பதிவில், "வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள், நான் யாருடனும் டேட்டிங் செய்யவில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, முகமது சிராஜும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வதந்திகளை மறுத்திருந்தார். அவர், "என்னைச் சுற்றி கேள்விகள் கேட்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மற்றும் ஆதாரமற்றது. இது முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
மஹிராவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் ஒன்றை சிராஜ் விரும்புவதை ரசிகர்கள் கவனித்தபோது, டேட்டிங் வதந்திகள் கிளம்பியது. அதைத் தொடர்ந்து இருவரும் ஒருவரையொருவர் பின்தொடரத் தொடங்கினர். இதன் காரணமாகவே, காதல் பற்றிய பரவலான ஊகங்களுக்கு வழிவகுத்தது. தற்போது அவர்களே இதற்கு பதிலளித்துள்ளனர்.