தற்போது, சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதை பற்றி நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, இந்தியா விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன்.

100வது செயற்கைகோள்கள்:

கடந்த மாதம்தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையில்தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது.

இஸ்ரோ சாதனைகள்:

ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறு செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். சமீப ஆண்டுகளின் மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த மகிழ்ச்சியை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.

Also Read: அகத்திய முனிவர் வாரணாசியில் பிறந்துதான், தமிழகத்திற்குச் சென்றார்- பாஜக அமைச்சர் ஜெ.பி.நட்டா

அறிவியல் தினம்:

இன்னும் சில நாட்களில், நாம் தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். நமது குழந்தைகளுடைய, இளைஞர்களுடைய அறிவியல் மீதான ஆர்வமும், நாட்டமும் மிகுந்த முக்கியமான விஷயமாகும். இது தொடர்பாக என்னிடம் ஒரு கருத்து இருக்கிறது; இதை நீங்கள் விஞ்ஞானியாக ஒரு நாள் என்று கூறலாம் ( ‘One Day as a Scientist’ ). அதாவது, நீங்கள் ஒரு நாள் பொழுதை ஒரு அறிவியலாராக வாழ்ந்து பார்க்கவேண்டும். நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப, உங்கள் விருப்பத்திற்கேற்ப, எந்த நாளை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாளன்று நீங்கள் ஏதோ ஒரு ஆய்வுக்கூடம், கோளரங்கம் அல்லது விண்வெளி மையம் போன்ற இடங்களுக்குக் கண்டிப்பாகச் சென்று வாருங்கள். இதனால் அறிவியல் மீதான உங்களுடைய ஆர்வம் மேலும் அதிகரிக்கும்.

ஏஐ:

விண்வெளி, அறிவியல் ஆகியவற்றைப் போலவே மேலும் ஒரு துறையில் பாரதம் விரைவாகத் தனது பலத்தை அடையாளப்படுத்திக் கொண்டுவருகிறது என்றால் அது தான் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு. தற்போது தான் நான் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒரு பெரிய மாநாட்டிலே பங்கெடுக்க பாரீஸ் நகரம் சென்றிருந்தேன். இந்தத் துறையில் பாரதம் கண்டிருக்கும் முன்னேற்றம் குறித்து அங்கே உலகமே நன்கு பாராட்டியது. நமது தேசத்தவர்கள் இன்று செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை எந்த எந்தத் துறைகளில் செய்து வருகிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகளையும் அங்கே காண முடிந்தது.

விண்வெளித் துறையாகட்டும், செயற்கை நுண்ணறிவுத் துறையாகட்டும், நமது இளைஞர்களின் அதிகரித்துவரும் பங்கெடுப்பு ஒரு புதிய புரட்சிக்குப் பங்களித்து வருகிறது. புதிய புதிய தொழில்நுட்பங்களை ஏற்பதிலும், கையாள்வதிலும் பாரதநாட்டவர் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.