ARTICLE AD BOX
திருவாரூர் : திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் இருந்து வருகிறது. சைவசமய தலங்களில் முதன்மையான தலமாக இருந்து வரும் இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது.
இதேபோல் இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், 5 வேலி பரப்பளவிலான கமலாலய குளமும் இருந்துவருகிறது. கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர விழாவில் ஆழி தேரோட்ட விழாவும் பின்னர் கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் சுமார் 20 அடி ஆழம் கொண்ட இந்த குளத்தில் இருந்து வரும் நீரின் அளவை பொறுத்தே நகரின் 4 பகுதிகளிலும் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி இந்த குளத்தின் நீர் புனித தீர்த்தமாக கருதப்படுவதால் முன்னேர்களுக்கு நிதி கொடுப்பது மற்றும் 16ம் நாள் காரியம் செய்வது போன்ற வற்றிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்தாண்டில் கோடை வெயில் என்பது மார்ச் மாதம் துவங்கி கடந்த அக்டோபர் மாதம் வரையில் 7 மாத காலம் சுட்டெரித்த நிலையில் இந்த குளத்தின் நீர்மட்டமானது 7 அடிக்கு கீழே குறைந்தது.
இதன் காரணமாக சுற்றுபுற பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டமானது குறைந்த நிலையில் அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை காரணமாகவும். திருவாரூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாகவும் இந்த குளத்தில் நீர்மட்டமானது மீண்டும் உயரத்தொடங்கி தற்போது குளத்தின் முழு கொள்ளளவான 20 அடி உயரத்தினையும் எட்டியுள்ளது.
மேலும் நகரை சுற்றி வசித்து வரும் முதியவர்ளில் பெரும்பாலனவர்கள் மாலை நேரங்களில் தியாகராஜரை தரிசித்த பின்னர் இந்த குளத்தின் கீழ்கரையில் இருந்து வரும் சிமெண்ட் கட்டைகளில் அமர்ந்தவாறு இரவு 8 மணி வரையில் தங்களது நண்பர்களுடன் பேசிவிட்டு அதன்பின்னர் தங்களது வீடுகளுக்கு செல்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த குளத்தின் கீழ்கரையில் பானிபூரி, பருத்திபால் உள்ளிட்ட பல்வேறு சாலையோர தற்காலிக கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக முதியோர்கள் அமர்வதற்கு இடமில்லாமல் போனது மட்டுமின்றி தங்களது இருசக்கர வாகனத்தில் வருகை தரும் நடுத்தர வயதினரும் வாகனங்களை நிறுத்துவதற்கு கூட இடமில்லாமல் தவித்து வந்தனர்.
இதுமட்டுமின்றி இந்த சாலையோர கடைகள் காரணமாக குளத்தின் கரையில் பிளாஸ்டிக் கப்புகள், ஸ்பூன்கள், கேரிபேக்குகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகள் மட்டுமின்றி மதுபாட்டில்களும் குவிந்து கிடந்தது தொடர்பாக புகைப்படம் மற்றும் விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவியதையும், இதனையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் இந்த குளகரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றதையும் கடந்த 16ந் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடபட்டதுடன், இதுபோன்ற சம்பவம் மீண்டும் தொடராமல் இருப்பதற்கு இந்த குளக்கரையில் இருந்து வரும் சாலையோர கடைகளை அகற்றிட வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோர தற்காலிக கடைகள் அங்கிருந்து அகற்றப்பட்ட நிலையில் நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்களும், பக்தர்களும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
The post நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை கமலாலய தெப்பக்குள கீழ்கரை கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.