ARTICLE AD BOX
தோனி-யின் சேட்டை.. கிரிக்கெட்-க்கு நடுவில் முதலீடு.. ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் டீல்..!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தமிழ்நாட்டின் தல, கூல் கேப்டன் என பல பெயர்களுடன் வலம் வரும் மகேந்திர சிங் தோனி, ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் விளையாட சென்னை பயிற்சி மைதானத்திற்கு வந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 10 நாள் பயிற்சி முகாமில் தோனி கலந்துகொண்டு அணியினருடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
சென்னையில் அமைந்துள்ள ஹைய் பர்பாமென்ஸ் சென்டரில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், தோனி தனது பேட்டிங் திறனை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இவருடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 2015 சீசனுக்குப் பிறகு முதல் முறையாக சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட பெரும்பாலான சிஎஸ்கே வீரர்கள் கலந்துக்கொண்டு ஒன்றாக பயிற்சி பெறுகின்றனர்.

இதற்கிடையில், தோனியின் குடும்ப அலுவலகம், SILA என்ற முன்னணி ரியல் எஸ்டேட் சேவைகள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. தோனி கிரவுண்டில் எப்படி ஒரே நேரத்தில் பல விஷயங்களை கணக்கிட்டு விக்டெக்களை டக்கு டக்கு என எடுக்கிறாரோ, இதேபோல் முதலீட்டிலும் சரி, பிஸ்னஸிலும் சரி மாஸ் காட்டி வருகிறார். பல பிராண்டுகளுடனும், நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படும் தோனி தற்போது ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்.
SILA நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை மேம்படுத்த இந்த முதலீட்டை தோனி செய்துள்ளதாகச் செவ்வாயன்று அறிவித்துள்ளார். தோனி இந்த நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பது வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த கூட்டணி SILA நிறுவனத்தின் சந்தை நிலை மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்தும் என உறுதிப்படுத்துகிறது.
2010 ஆம் ஆண்டில் ரூஷப் மற்றும் சாஹில் வோரா ஆகியோரால் நிறுவப்பட்ட SILA, இந்தியாவின் ரியல் எஸ்டேட் சேவை துறையில் ஒரு முக்கிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. நோர்வெஸ்ட் வென்ச்சர் பார்ட்னர்ஸின் ஆதரவையும் பெற்றுள்ள இந்த நிறுவனம், வசதி மேலாண்மை மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசனை சேவைகளில் நிபுணத்துவம் பெற்று, இந்தியா முழுவதும் செயல்படுகிறது.
இந்தியா முழுவதும் 125 க்கும் மேற்பட்ட நகரங்களில் 200 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான ரியல் எஸ்டேட்டை SILA நிர்வகிக்கிறது. 25,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனம், நிறுவனத்தின் பரந்த அளவிலான செயல்பாட்டுத் திறனைக் கொண்டுள்ளது.