ARTICLE AD BOX
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். தோனி தனது கேப்டன் பதவியை அவருக்கு அளித்தார். அப்போது தோனி தன்னிடம் என்ன கூறினார் என்பது பற்றி ருதுராஜ் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.
அதில் தோனி தன்னிடம் அப்போது கூறிய வார்த்தைகளை அவர் விவரித்தார். "இனி இது உனது அணி. இனி எல்லாமே உனது முடிவுகள் தான். ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் நாம் 50 - 50 முடிவுகளைப் பகிர்ந்து கொள்வோம்," என்று கூறியதாக அவர் தெரிவித்து இருக்கிறார். அது பற்றிப் பார்க்கலாம்.

2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியானது. தோனி இனி ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் இடம் பெறுவார் என்றும், அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி விட்டதாகவும், ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதாகவும் சிஎஸ்கே அணி அறிவித்தது.
இந்த நிலையில், தோனி தன்னிடம் கேப்டன் பதவி அளித்த போது என்ன கூறினார் என ருதுராஜ் விவரித்தார். "அப்போது 2024 ஐபிஎல் தொடர் துவங்க ஒரு வாரம் இருக்கும் முன் தோனி என்னிடம், 'இனி நீதான் இந்த ஆண்டு அணியை வழிநடத்தப் போகிறாய்' என்றார். நான் ஒரு நிமிடம் திகைத்துவிட்டேன். 'முதல் போட்டியில் இருந்தே-வா? நிச்சயமாக இதுதான் உங்கள் முடிவா?' என்று கேட்டேன். மிகச் சில நாட்களே இருந்ததால், எனக்கு அது அதிகப்படியான விஷயமாக இருந்தது."
"ஆனால், தோனி எனக்கு ஆதரவு அளித்தார். 'இது உனது அணி, நீ உனது சொந்த முடிவுகளை எடுக்கலாம். நான் எதிலும் தலையிட மாட்டேன். ஆனால் ஃபீல்டிங் நிறுத்தங்களில் மட்டும் நாம் 50 - 50 முடிவுகளை எடுக்கலாம். ஆனால், எனது ஆலோசனைகளை நிச்சயம் செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை' என்றார். என் மீதான அவரின் நம்பிக்கை மிகப் பெரிய விஷயம்," என்றார் ருதுராஜ் கெய்க்வாட்.
இது பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசுகையில், "தோனியை பொருத்தவரை அனைத்தையும் அவர் தன்னுடனே வைத்துக் கொள்வார். கடைசி தருணத்தில் தான் அவரது முடிவுகள் வெளியே தெரியும். சிஎஸ்கே அணி மீது அவருக்கு இருக்கும் ஆர்வம், அவருக்கு இருக்கும் ரசிகர்கள், மேலும் ஒரு பேட்டியில் 'சென்னையில் தான் எனது கடைசி போட்டியில் விளையாடுவேன்' என அவர் கூறியது ஆகியவற்றின் மூலம் அவர் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என நாங்கள் நம்புகிறோம்."
"தோனி விளையாட வேண்டும் என நினைக்கும் வரை சிஎஸ்கே-வின் கதவுகள் திறந்தே இருக்கும். அவரது அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பை பற்றி எங்களுக்குத் தெரியும். அவர் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்," என்றார் காசி விஸ்வநாதன்.
MS Dhoni- ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை வந்தார் தோனி..டிசர்ட் டிசைனில் மறைந்திருக்கும் செய்தி என்ன?
2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போனாலும், சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. நூலிழையில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.