ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி வருவது தான் தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற அணிகள் எல்லாம் லாகூருக்கும் துபாய்க்கும் அலையும் நிலையில், இந்தியா துபாயில் தங்கி ஆரம்பம் முதல் இறுதி வரை விளையாடுவது கூடுதல் சாதகத்தை ஏற்படுத்திருப்பதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் வீரர்கள் தொடங்கி இங்கிலாந்து ,நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் வரை இந்தியாவை கடுமையாக சாடிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு படி மேல் போய் தாங்கள் அரையிறுதியில் தோல்வியை தழுவியதற்கு முட்டாள்தனமான அட்டவணை தான் காரணம் என்றும் இதற்காகவே நாங்கள் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு தான் ஆதரவு அளிப்போம் என தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் கூறியிருக்கிறார்.

ஒரு சிலர் இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடுவதால் அது அவர்களுக்கு கூடுதல் சாதகத்தை தருவதாக குற்றம் சாட்டினர். இதற்கு விளக்கம் அளித்துள்ள ரோஹித் சர்மா, துபாய் ஒன்றும் எங்களுக்கு சொந்தம் இல்லை என்றும் எங்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு ஆடுகளம் தருகிறார்கள். அது அனைத்துமே வித்தியாசமாக செயல்படுகிறது என்றும் கூறியிருந்தார்.
ரோகித் சர்மாவின் கூற்றில் ஓரளவுக்கு நியாயம் இருந்தாலும், கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்கு மேல் ஒரே மைதானத்தில் விளையாடும் போது அந்த மைதானம் எவ்வாறு செயல்படுகிறது. ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பதை கணித்து விளையாட முடியும். ஆனால் இது ஒன்றும் இந்தியாவின் தவறு கிடையாது.
போட்டியை துபாயில் மட்டும் நடத்தாமல் சார்ஜா, அபுதாபி என அனைத்து மைதானங்களிலும் நடத்தி இருந்தாலும் இந்தியா அங்கு சென்று விளையாடி இருக்கும். எனவே இந்த அட்டவணை விவகாரத்தில் தவறு செய்தது ஐசிசி தான். இதே போன்று இந்தியா துபாயில் தங்கி ஹோட்டலுக்கும் மைதானத்திற்கும் மட்டும்தான் பயணம் செய்கிறார்கள் என்ற ஒரு புகார் வருகிறது.
ஆனால் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் எல்லாம் லாகூரில் இருந்து துபாய்க்கும் துபாயில் இருந்து லாகூருக்கும் மாறி மாறி சென்றது. இது உண்மையிலே தவறான விஷயம் தான். சொல்லப் போனால் அரை இறுதி எங்கு நடைபெறுகிறது என்று தெரியாமல் தென்னாப்பிரிக்க அணி தேவையில்லாமல் துபாய்க்கு வந்து பின்னர் மீண்டும் லாகூருக்கு சென்று இருக்கிறது.
இது ஐசிசியின் முட்டாள்தனமான அட்டவணை தயாரிப்பு என்று சொல்ல வேண்டுமே, தவிர இந்திய அணியை குறை சொல்லக்கூடாது. இதேபோன்று 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் எல்லாம் ஒரே மைதானத்தில் 3 அல்லது 4 போட்டிகளில் விளையாடின. ஆனால் இந்தியா மட்டும் நாடு முழுவதும் ஒவ்வொரு மைதானத்திலும் ஒரு போட்டி என்ற வீதத்தில் விளையாடியது.
ஆனால் அப்போதெல்லாம் இந்தியா தங்களுக்கு கடினமான அட்டவணையை போட்டு விட்டார்கள் என்று குறைய சொல்லவில்லை. ஆனால் அப்போது கடினமான அட்டவணையில் விளையாடி இந்தியாவுக்கு தற்போது இனிதான் அட்டவணை அமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே இதில் இந்தியாவை அநியாயம் செய்து விட்டார்கள் என்று சொல்வது தவறு. இதேபோன்று ஐபிஎல் தொடரில் இதை விட கடினமான அட்டவணையில் இந்திய வீரர்கள் விளையாடியும் இருக்கிறார்கள்.
மற்ற நாடுகள் எல்லாம் வருடத்திற்கு ஆறு மாதம் தான் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஆனால் இந்தியா 11 மாதம் கிரிக்கெட் விளையாடுகிறது. எனவே ஏதோ இந்திய அணி மற்ற அணிகளை ஏமாற்றுகிறது என்பது போல் பேசுவது மிகவும் தவறான விஷயம். இதனால்தான் கோபப்பட்டு கம்பீரும், ரோகித் சர்மாவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் பேசுகிறார்கள். ஆனால் இதற்கு மற்ற அணிகள் ஓவராக ரியாக்ட் செய்கிறார்கள் என்பதே உண்மை. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் விளையாடவில்லை என இந்தியா புறக்கணித்து இருந்தால் இந்த அளவிற்கு பணம் ஐசிசிக்கும் கிடைக்காது என்பது தான் நிதர்சனம்.