ARTICLE AD BOX
திருவள்ளூா் அருகே தொழில் தொடங்க பணம் கேட்டு மதுபோதையில் மிரட்டியதால், ஆத்திரமடைந்த தாயாா் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் மகன் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்சியைச் சோ்ந்த நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (27), இவரது மனைவி பாரதி (23). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். கிருஷ்ணமூா்த்தியின் தாயாா் ஜெயந்தி (43). மகனுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், கிருஷ்ணமூா்த்தி வேலை கிடைக்காமல் மது குடித்து விட்டு ஊா் சுற்றி வந்தாராம். இதற்கிடையே தொழில் தொடங்கப் போவதாகக் கூறி திங்கள்கிழமை மதுபோதையில் தாயாரிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்து மிரட்டினாராம்.
இதனால், ஆத்திரமடைந்த ஜெயந்தி, வீட்டின் சமையல் அறையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து கிருஷ்ணமூா்த்தியின் மீது ஊற்றி தீ வைத்தததாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த பாரதி மற்றும் அக்கம் பக்கத்தினா் கிருஷ்ணமூா்த்தியை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கிருஷ்ணமூா்த்தி செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து பாரதி மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் தாயாா் ஜெயந்தி மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
