ARTICLE AD BOX
ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் நுகா்வு மற்றும் இறக்குமதியில் உலகின் மூன்றாவது பெரிய நாடான இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது.
இந்நிலையில், நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆா்வம் காட்டியதையடுத்து கடந்த 2022-ஆம் ஆண்டு, பிப்ரவரி 24-ஆம் தேதி உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த பிறகு அந்நாட்டிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்ததைத் தொடா்ந்து, கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் விற்பனை செய்ய தொடங்கியது ரஷியா. இதனால் ரஷியாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விகிதம் 1 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்தது.
அதிக இறக்குமதியில் மூன்று நாடுகள்: ரஷியாவிடமிருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கிய நாடுகளின் பட்டியலைக் கொண்ட அறிக்கையை எரிசத்தி மற்றும் தூய காற்று ஆய்வு மையம் வெளியிட்டது. அதில், ‘போரின் மூன்றாவது ஆண்டில் ரஷியாவிடமிருந்து சீனா ( ரூ.7.1லட்சம் கோடி), இந்தியா (ரூ.4.45 லட்சம் கோடி), துருக்கி (ரூ.3.1 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளன. இது கச்சா எண்ணெய் மூலம் ரஷியா பெற்ற மொத்த வருவாயில் 74 சதவீதமாகும். முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், நிகழாண்டு இந்திய இறக்குமதி 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரூ.77 லட்சம் கோடி வருவாய்: போரின் மூன்றாவது ஆண்டில் மட்டும் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் ரூ.22 லட்சம் கோடியும், போா் தொடங்கியதில் இருந்து மொத்தம் ரூ.77 லட்சம் கோடியும் வருவாயாக ரஷியா பெற்றுள்ளது.
ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக மாற்றி இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஜி7 நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றன.
அந்த வகையில், இந்தியா மற்றும் துருக்கியில் ரஷிய கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்யும் 6 ஆலைகளில் இருந்து ரூ.1.6 லட்சம் கோடிக்கு கச்சா எண்ணெய் பொருள்களை ஜி7-பிளஸ் நாடுகள் இறக்குமதி செய்துள்ளன. அதில் ரூ.82,000 கோடி மதிப்பிலான ரஷிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
முதல் 5 ஐரோப்பிய நாடுகள்: இந்தியா மற்றும் துருக்கியில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து அதிக கச்சா எண்ணெய் பொருள்களை இறக்குமதி செய்வதில் பெரும்பான்மையாக ஐரோப்பிய நாடுகளே உள்ளன. அதில் நெதா்லாந்து, பிரான்ஸ், ருமேனியா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடத்தில் உள்ளன. இந்த ஆலைகளில் இருந்து அதிக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் தனிப்பெரும் நாடு என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா (ரூ.30,800 கோடி) முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
ரஷியாவிடம் பெற்ற கச்சா எண்ணெய்
(போரின் மூன்றாவது ஆண்டில்...)
சீனா - ரூ.7.1லட்சம் கோடி
இந்தியா - ரூ.4.45 லட்சம் கோடி
துருக்கி - ரூ.3.1 லட்சம் கோடி
பிரேக் லைன்..
ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஜி7 நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியா, துருக்கி ஏற்றுமதி செய்தன.
- ஆய்வு அறிக்கை