ARTICLE AD BOX
உடல் பருமன் என்பதைத் தாண்டி சிலருக்கு வயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்புகள் அதிகம் சேர்ந்து தொப்பை இருக்கும். இது உடலுக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன் அழகு தொடர்பான பிரச்னையாகவும் மாறிவிட்டது. தொப்பை ஏன் ஏற்படுகிறது? வராமல் தடுப்பதும் வந்தபின் குறைப்பதும் எப்படி?
தொப்பை என்பது அழகு தொடர்பான பிரச்னை மட்டுமல்ல, ஹார்மோன்கள், வாழ்க்கை முறை, மரபியல் காரணங்களால் பாதிக்கப்படும் தீவிர வளர்சிதை மாற்ற மாற்றங்களின் அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தொப்பையினால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கூறும் மருத்துவர்கள், உடல் எவ்வாறு வயிற்றுப் பகுதியில் கொழுப்பைச் சேமித்து வைக்கிறது என்பதைப் பொருத்து ஒவ்வொருவரின் பாதிப்புகள் மாறுபடும் என்கின்றனர்.
தொப்பை ஏன் வருகிறது?
வயிற்றுக் கொழுப்பில் இரண்டு வகைகள் உள்ளன. தோலுக்கு அடியில் உள்ள கொழுப்பு, மற்றொன்று கல்லீரல், குடல் போன்ற உள்ளுறுப்புகளைச் சுற்றிக் காணப்படும் கொழுப்பு. இவற்றில் உள்ளுறுப்புகளில் காணப்படும் கொழுப்பு அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
ஏனெனில் இவை அழற்சிப் பொருள்கள் மற்றும் ஹார்மோன்களை வெளியிடுவதால் இதய நோய், டைப்-2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என ட்ரைலைஃப் மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் டாக்டர் பிரசாந்த் ராம்தாஸ் வான்கடே கூறினார்.
இதையும் படிக்க | குப்புறப்படுத்துத் தூங்குறீங்களா? அது நல்லதுதானா?
"தொப்பை ஏற்படுவது பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்பின் அறிகுறியாகும். அதாவது போதிய இன்சுலின் சுரப்புக்கு உடல் ஒத்துழைக்காது. இதனால் உடல், ரத்த சர்க்கரை அளவை சீராக்கப் போராடுகிறது. இது வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது.
மரபியல் காரணங்கள், உணவு முறை, வாழ்க்கை முறை முக்கியமாக ஹார்மோன் மாற்றங்களினால் தொப்பை ஏற்படுகிறது. ஆண்கள், பெண்கள் என இருபாலினத்தவரிடமும் இதன் பாதிப்புகள் மாறுபடுகிறது. இதில் ஹார்மோன் மாற்றங்கள் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் ஏற்படும்போது ஆண்களுக்கு தொப்பை ஏற்படும். 'ஆப்பிள் வடிவத்தில்' தொப்பை இருக்கும் ஆண்களுக்கு பாதிப்புகள் அதிகம் இருக்கும்.
பெண்களில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனால் இடுப்பு மற்றும் தொடைகளில் அதிக கொழுப்பு இருந்தால் விளைவுகள் அதிகமிருக்கும்.
பெண்களில், குழந்தை பிறப்புக்குப் பிறகும் மாதவிடாய் நின்ற பிறகும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைத்து கொழுப்பினை உருவாக்கும்போது தொப்பை ஏற்படுகிறது" என்று தெரிவித்தார்.
ஆஸ்தர் மருத்துவமனையின் உள் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் சுசிஷ்மிதா ராஜமான்யா இதுபற்றிக் கூறியதாவது:
உடல், சாதாரணமாக எரிக்கும் கலோரிகளைவிட அதிக கொழுப்புகள் சேரும்போது, எஞ்சிய கொழுப்பு உடலில் தங்கிவிடத் தொடங்குகிறது. குழந்தைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் கொழுப்பு பொதுவாக உடல் முழுவதும் சமமாகப் பரவுகிறது. வயதாகும்போது இந்த வளர்சிதை மாற்றம் குறைகிறது. இதனால் கொழுப்பு சேமிப்பு முறைகள் மாறுகின்றன.
அமர்ந்தே வேலை செய்யும் முறையாலும் கலோரி மிகுந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் இப்போதெல்லாம் 20, 30களிலே வயிற்றில் கொழுப்புகள் சேர ஆரம்பித்து விடுகின்றன.
ஏன், மன அழுத்தம், தூக்கமின்மைகூட உடலில் கார்டிசோல் அளவை அதிகரிப்பதால் வயிற்றில் கொழுப்புகள் சேரத் தூண்டும்.
இதையும் படிக்க | பொரித்த உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா? எண்ணெய் பற்றிய கவனம் தேவை!
தடுப்பது எப்படி?
உடலில் பல நோய்கள் வராமல் தடுக்க, தொப்பை இருப்பவர்கள் அதனைக் குறைக்க உடனடியாக முயற்சிக்க வேண்டும்.
உடல் எடை சரியாக இருந்து, தொப்பை இருந்தாலும் ஆபத்துதான். அதுவும் உடலில் பல கோளாறுகளை ஏற்படுத்தும். அதனால் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
மன அழுத்தத்தினாலும் உடல் எடை அதிகரிப்பு அல்லது தொப்பை ஏற்படும் என்பதால் அதனைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இது தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி நீண்டகால ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
சரியான எடை உள்ளவர்களும் தொப்பை ஏற்படாமல் இருக்க உணவு முறை, உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள்,
வெள்ளை ரொட்டி மற்றும் பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள்
ஆல்கஹால் மற்றும் டிரான்ஸ் பேட் எனும் கெட்ட கொழுப்புகள் அதிகமுள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
நார்ச்சத்து அதிகமுள்ள ஓட்ஸ், பிளக்ஸ் விதைகள், சியா விதைகள், கீரைகள் போன்ற பச்சை இலைக் காய்கறிகள், பீன்ஸ்
புரதம் அதிகமுள்ள முட்டை, சிக்கன், மீன், கெட்டித்தயிர்.
ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் விதைகள், அவோகேடோ.
நோயெதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சள், இஞ்சி, பூண்டு, க்ரீன் டீ.
நீர்ச்சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி, எலுமிச்சை நீர், மூலிகை டீ ஆகியவற்றைச் சாப்பிடலாம்.