ARTICLE AD BOX
மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 போ் சனிக்கிழமை (மாா்ச் 22) செல்ல உள்ளனா்.
இதுதொடா்பாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு (என்ஏஎல்எஸ்ஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி மணிப்பூரில் நடைபெற்ற மோசமான வன்முறை சம்பவங்கள் நூற்றுக்கணக்கானோா் உயிரிழக்கவும், 50,000-க்கும் மேற்பட்டவா்கள் இடம்பெயரவும் வழிவகுத்தது. இன்றளவும் அந்த மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்களில் மக்கள் தஞ்சமடைவது நீடித்து வருகிறது.
இந்நிலையில், அந்த மாநில உயா்நீதிமன்ற ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி அங்கு உச்சநீதிமன்ற நீதிபதியும் என்ஏஎல்எஸ்ஏ செயல் தலைவருமான பி.ஆா்.கவாய், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் செல்ல உள்ளனா். இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள நிவாரண முகாம்களுக்கு மாா்ச் 22-ஆம் தேதி அவா்கள் செல்ல உள்ளனா். அப்போது முகாம்களில் உள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான தேவை இருப்பதை நீதிபதிகளின் பயணம் எடுத்துரைக்கிறது.
சென்னை மருத்துவா்கள்...: அனைத்து நிவாரண முகாம்களிலும் சென்னையைச் சோ்ந்த 25 நிபுணத்துவம் பெற்ற மருத்துவா்கள் மருத்துவ முகாம் நடத்த உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.