தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த ஓலா எலக்ட்ரிக்.. டக்கென்னு 16% உயர்ந்த அதிசயம்..!

5 hours ago
ARTICLE AD BOX
  Market update

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த ஓலா எலக்ட்ரிக்.. டக்கென்னு 16% உயர்ந்த அதிசயம்..!

Market Update

2017ல் தொடங்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஒரு மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமாகும். மேலும் இந்நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி பேக்குகள், மோட்டார்கள் மற்றும் வாகன பிரேம்கள் உள்ளிட்ட முக்கிய பாகங்களையும் உற்பத்தி செய்கிறது. பெரிய அளவில் வளர்ச்சி காணும் எதிர்பார்க்கப்பட்ட இந்நிறுவனம், சமீபகாலமாக பிரச்சினைக்கு மேல் பிரச்சினை என தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் பங்கு விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தற்போது ஓலா எலக்ட்ரிக் புது பஞ்சாயத்தை எதிர்கொண்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனம் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ். இந்நிறுவனம் மோட்டார் வாகனங்கள் மற்றும் அவற்றின் இயந்திரகளுக்கான பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்துக்கு தனது துணை நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ் மூலம் புது பிரச்சினை வந்துள்ளது.

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த ஓலா எலக்ட்ரிக்.. டக்கென்னு 16% உயர்ந்த அதிசயம்..!

ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு வாகன பதிவு சேவையை ராஸ்மெர்டா டிஜிட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் வழங்கி வந்தது. சேவையை மட்டும் பெற்று கொண்ட ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ் நிறுவனம், அதற்கான பணத்தை ராஸ்மெர்டா டிஜிட்டல் சர்வீசஸ் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தரும்படி பலமுறை ராஸ்மெர்டா டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனம் கேட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இதனையடுத்து பொறுத்து பொறுத்து பார்த்த ராஸ்மெர்டா டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனம் கடைசியில் பொங்கி எழுந்தது. தாங்கள் வழங்கிய சேவைக்கு முறையாக பணம் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி, ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ராஸ்மெர்டா டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், வழங்கிய சேவைக்கான பணத்தை தவற தவறியதால் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ் நிறுவனம் மீது திவால் நடவடிக்கைக்கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய பெங்களூரு அமர்வில் ராஸ்மெர்டா டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ராஸ்மெர்டா டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனத்தின் குற்றச்சாட்டை ஓலா எலக்ட்ரிக் மறுத்துள்ளது. மேலும், சட்ட ஆலோசனை பெற்று குற்றச்சாட்டுகளை எதிர்க்க திட்டமிட்டுள்ளோம். நிறுவனத்தை தற்காத்து கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக முதலீட்டாளர்களுக்கு ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

இந்த செய்தி வெளியானதையடுத்து, நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவன பங்கின் விலை சுமார் 7 சதவீதத்துக்கு மேல் சரிந்து புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.46.40க்கு சென்றது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.46.91ல் முடிவுற்றது. இந்நிலையில் இன்றும் மும்பை பங்குச் சந்தையில் ஓலா எலக்ட்ரிக் பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்ச அளவை சந்தித்தது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவன பங்கின் விலை சுமார் 1.25 சதவீதம் சரிந்து புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.46.32க்கு சென்றது.

ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை மளமளவென ஏறியது. இன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை சுமார் 16 சதவீதம் உயர்ந்து ரூ.54.35 வரை சென்றது. இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் ஓலா பங்கின் விலை உயர்வு நீடிக்குமா என்றால் அது சந்தேகம்தான். ஏனென்றால் ஓலா பங்கின் கடந்த கால புள்ளிவிவரங்கள் எதிர்மறையாகவே இருக்கின்றன. கடந்த 6 மாதத்தில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவன பங்கு விலை 60 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பங்கின் விலை 23 சதவீதம் சரிவு கண்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கு விலை 45 சதவீதம் குறைந்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஆகஸ்டில் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கிறது. ஐபிஓவில் ஒரு பங்கு விலை ரூ.76என நிர்ணயம் செய்யப்பட்டது. ஓலாவின் ஐபிஓ வெற்றிபெற்றதையடுத்து கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பங்குச் சந்தைகளில் ஓலா எலக்ட்ரிக் பங்குகள் ஒரு பங்கு ரூ.76 என்ற விலையில் பட்டியலிடப்பட்டன. 2024 ஆகஸ்ட் 20ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பங்கு விலை இதுவரை இல்லாத உச்சபட்சமான ரூ.157.53ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தின் மீதான தொடர் விமர்சனங்களால் இப்பங்கின் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

பங்கு விலை கடுமையாக குறைந்துள்ள இந்த நிலையில் இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாமா என்றால், அது பெரிய ரிஸ்க் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இப்பங்கு தொடர்ந்து பலவீனமாகவே இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் வினித் போலின்ஜ்கர் கூறுகையில், நிறுவனம் அதன் விற்பனை அளவை மீண்டும் பெற வேண்டும். முழு மின்சார வாகன துறையும் அதிகரிக்கும் இந்த நேரத்தில் அது அதன் விற்பனை அளவை மீண்டும் பெறவில்லை என்றால், அதன் தயாரிப்புகளின் ஏற்றுக்கொள்ளும் தன்மையில் ஒரு குறைபாடு உள்ளது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பெரும்பாலான பிரிவுகளில் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் விற்பனை அளவில் நிலைத்தன்மை இல்லை. எனவே எதிர்மறை நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார். பிரபுதாஸ் லில்லாதார் நிறுவனத்தின் துணை தலைவர் (தொழில்நுட்ப ஆராய்ச்சி) வைஷாலி பரேக் கூறுகையில், கவுண்டர் கீழ்நோக்கிய போக்கில் உள்ளது. மேலும் தினசரி அட்டவணையில் அதிகமாக விற்கப்பட்ட பிரிவில் இப்பங்கு வர்த்தகம் செய்யப்பட்டது. டிரெண்ட் மாறுவதற்காக நாம் காத்திருப்போம் என்று தெரிவித்தார். பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 12.56 சதவீதம் உயர்ந்து ரூ.52.80ஆக இருந்தது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Read Entire Article