தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசை வலியுறுத்தும் அந்த 3 தீர்மானங்கள் உணர்த்துவது என்ன?

5 hours ago
ARTICLE AD BOX

தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசை வலியுறுத்தும் அந்த 3 தீர்மானங்கள் உணர்த்துவது என்ன?

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 நிமிடங்களுக்கு முன்னர்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இவை வலியுறுத்துவது என்ன? இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்ட தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் எனக் கூறி, அதனை எதிர்கொள்வதற்காக மாநில அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை சென்னையில் மார்ச் 5-ம் தேதியன்று நடத்தியது.

தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சில இயக்கங்கள் என 63 அமைப்புகளுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை இதில் பங்கேற்கவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

  • "மக்கள் தொகை அடிப்படையிலான "நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை" இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.
  • 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று 2000வது ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
  • நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் - தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
  • தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவிகிதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக்கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  • இந்தக் கோரிக்கைளையும் அவை சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் - மக்கள் மத்தியில் இந்தப் பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் - தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய 'கூட்டு நடவடிக்கைக் குழு' ஒன்றை அமைத்திட வேண்டும்" என இந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டம், தொகுதி மறுவரையறை

பட மூலாதாரம், X/@mkstalin

படக்குறிப்பு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தமிழ்நாடு வலியுறுத்துவது என்ன?

இதில், மூன்று தீர்மானங்கள் மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானங்களாக அமைந்திருக்கின்றன. ஒரு தீர்மானம், 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் அடிப்படையிலேயே அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும் என்கிறது. இன்னொரு தீர்மானத்தில், தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாக இருந்தால் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை இருக்கிறதோ, அதே விகிதத்தில் உயர்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு தீர்மானமும் கிட்டத்தட்ட இதையே வலியுறுத்துகிறது. அதாவது, மொத்தத் தொகுதிகளில் தமிழகத்தில் உள்ள தொகுதிகளின் சதவிகிதம் 7.18. அது மாறக்கூடாது என்கிறது அந்தத் தீர்மானம்.

1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு மறுவரையறையைச் செய்வதென்றால், தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டதுதான். வேண்டுமானால், தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கலாம்.

அடுத்த இரு தீர்மானங்களும் தமிழ்நாட்டுக்கு தற்போது உள்ள பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என வலியுறத்துகின்றன. அதாவது, இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 543. தமிழ்நாட்டில் 39 இடங்கள். சதவிகிதக் கணக்கின்படி பார்த்தால், மொத்த இடங்களில் 7.18 சதவிகித இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை எவ்வளவு உயர்த்தினாலும் தமிழ்நாட்டுக்கு 7.18 சதவிகித அளவுக்கான இடங்களைத் தர வேண்டும் என்கிறது இந்தத் தீர்மானம்.

தமிழ்நாட்டை எப்படி பாதிக்கும்?

ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும், மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டுமென இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதன்படி இந்தியாவில் மூன்று முறை தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றன.

கடைசியாக 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, 1973ல் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டன. இதற்குப் பிறகு 1975ல் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு, மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. இதனால், மக்கள் தொகை நிலைபெறும்வரை தொகுதி மறுவரையறையை நிறுத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆகவே, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை செய்யாமல் இருக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

2001ல் இந்த 25 ஆண்டு கால வரையறை முடிவுக்கு வந்தது. இதனால் 2002ல் அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, தொகுதி மறுவரையறை மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடப்பட்டது. ஆகவே, 2026க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம்போல நடந்திருந்தால், 2026ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031ஆம் ஆண்டில்தான் நடந்திருக்கும். ஆனால், 2021ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், அந்தக் கணக்கெடுப்பு 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்தால், அதன் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளிலேயே தொகுதிகளை மறுவரையறை செய்யலாம்.

இந்தப் பின்னணியில்தான் 2026-ஐ ஒட்டி தொகுதி மறுவரையறை நடந்தால், அது தமிழ்நாட்டைக் கடுமையாக பாதிக்கும் என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கருதுகின்றன. ஆகவேதான், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தற்போதுள்ள விகிதாச்சாரத்திலேயே தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென அவை கோருகின்றன.

"தமிழ்நாட்டில் தற்போதுள்ள விகிதாச்சாரத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சொல்வது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சரியான கோரிக்கைதான். இந்தத் தருணத்தில் இப்படிக் கேட்பது மட்டும்தான் இயலும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துக்குமே இந்தக் கோரிக்கை சரியானதாக இருக்கும்" என்கிறார், 'சௌத் VS நார்த்: இந்தியாஸ் கிரேட் டிவைட்' (South VS North: India's Great Divide) நூலின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டன்.

தமிழ்நாடு, தொகுதி மறுவரையறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் வாதிடுகின்றன

பாஜக கூறுவது என்ன?

ஆனால், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எதுவுமே நடக்காதபோது, தங்கள் ஆட்சியின் அவலங்களை மறைக்க தி.மு.க. மோசமான அரசியலில் இறங்கியுள்ளதாக குற்றம்சாட்டுகிறார் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.

"2002ல் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பை தள்ளிப்போட்டபோது அந்த அரசில் தி.மு.கவும் அங்கம் வகித்தது. இப்போது அவர்கள் எடுத்த முடிவையே மாற்றச் சொல்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கை விகிதாசார (pro rata) அடிப்படையில் அதிகரிக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி அளித்தபோதும், அதனை எதிர்மறையாக அர்த்தப்படுத்திக்கொண்டு மோசமான அரசியல் செய்கிறார்கள் தி.மு.கவினர்" என்கிறார் நாராயணன் திருப்பதி.

நாராயணன் திருப்பதி

பட மூலாதாரம், Facebook/ Narayanan Thirupathy BJP

படக்குறிப்பு, திமுகவினர் இப்பிரச்னையை வைத்து எதிர்மறையான அரசியல் செய்வதாக கூறுகிறார், பா.ஜ.க மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி

கேள்வி எழுப்பும் மாநில முதலமைச்சர்கள்

ஆனால், தி.மு.க. மட்டுமல்ல, கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சரான சித்தராமைய்யாவும் தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் முதலமைச்சரான ரேவந்த் ரெட்டியும்கூட அமித் ஷாவின் வாக்குறுதியை சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் "தொகுதி மறுவரையறை தென்னிந்திய மாநிலங்களில் எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அமித் ஷா தெளிவுபடுத்தவில்லை.

மறுவரையறையால் தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்கிறாரே தவிர, தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் எவ்வளவு இடங்கள் அதிகரிக்கும் என்பதைச் சொல்லவில்லை. எந்த அடிப்படையில் அதிகரிக்கும்?" எனக் கேள்வியெழுப்பினார் ரேவந்த் ரெட்டி.

அதேபோல, கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் அமித் ஷா தென் மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதி நம்பத்தகுந்ததல்ல எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆய்வாளர்களின் கணிப்பு என்ன?

2019ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் மிலன் வைஷ்ணவ், ஜாமி ஹின்ட்ஸோன் ஆகியோர் இணைந்து 'இந்தியாஸ் எமர்ஜிங் கிரைசிஸ் ஆஃப் ரெப்ரசண்டேஷன்' (India's Emerging Crisis of Representation) என்ற கட்டுரையை எழுதினர். அதில் உள்ள கணிப்பின்படி பார்த்தால், மக்கள் தொகை அடிப்படையில் இடங்கள் மாற்றியமைக்கப்பட்டால், தமிழ்நாட்டைப் போலவே எல்லா தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் குறையும்.

அதாவது, இப்போதுள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல் தொகுதிகளை மறுசீரமைத்தால், 2026ல் தமிழ்நாட்டில் 31 இடங்கள் இருக்குமென்றும் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் சேர்ந்து 34 இடங்களும் கேரளாவில் 12 இடங்களும் இருக்குமென இவர்கள் குறிப்பிட்டனர்.

மாறாக, உத்தரப் பிரதேசத்தில் 91இடங்களும் பிஹாரில் 50 இடங்களும் ராஜஸ்தானில் 31 இடங்களும் மத்தியப் பிரதேசத்தில் 33 இடங்களும் இருக்குமெனக் குறிப்பிட்டனர்.

அதாவது, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய தென் மாநிலங்கள் 17 இடங்களை இழக்கும் நிலையில் பிஹார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை மாநிலங்கள் மொத்தமாக 22 இடங்களைக் கூடுதலாகப் பெறும்.

தென் மாநிலங்களின் கோரிக்கை சாத்தியமா?

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைப் பொறுத்தவரை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக இருந்தால், தற்போதுள்ள விகிதாச்சாரம் குறையாமல், எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்கின்றன. ஆனால், அந்தக் கோரிக்கை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதிகளை வரையறுக்க வேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம். ஆகவே, தென் மாநிலங்களின் கோரிக்கை எப்படி சாத்தியம்?

"மக்களைவிட நாடுதான் முக்கியம். அதனால், சிலர் தியாகம் செய்ய வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து இந்தக் கேள்வி வருகிறது. வேண்டுமானால், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தலாமே" என்கிறார் ஆர்.எஸ். நீலகண்டன்.

தென்மாநிலங்களின் இந்தக் கோரிக்கை, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்துக்கு எதிரானதாக இருக்காதா?

"இருக்கலாம். ஆனால், அதைப் பற்றி அவர்கள்தான் விவாதிக்க வேண்டும். அப்படி விவாதித்தால் அதிகாரப்பகிர்வுதான் சரியான தீர்வு என்பது புரியும். மேலும், இப்போதே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு வாய்ப்புக் கிடைப்பது அரிதாக இருக்கும் நிலையில், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், விவாதிக்கும் வாய்ப்பு குறையும் என்கிறார்கள்.

ஆனால், தற்போது நாடாளுமன்றம் வெகு குறைவான நாட்களே நடக்கிறது. நாடாளுமன்றம் நடக்கும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் இந்தப் பிரச்னை தீர்ந்துவிடும்" என்கிறார் அவர்.

மூத்த பத்திரிகையாளளர் குபேந்திரன்
படக்குறிப்பு, தி.மு.கவைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக இது முக்கியமான நகர்வு என்கிறார், மூத்த பத்திரிகையாளளர் குபேந்திரன்

ஆனால், தி.மு.கவைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக இது முக்கியமான நகர்வு என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

"தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு எதையுமே செய்யத் துவங்காத போது ஏன் இப்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்கிறார் பா.ஜ.கவின் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு, வெளியில் வந்து இதே கேள்வியைக் கேட்கிறது அ.தி.மு.க. ஆனால், பா.ஜ.க. அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன கட்சி. திடீரென எதையாவது அறிவிப்பார்கள். அப்படியான சூழலில் முன்கூட்டியே இதுபோல விவாதித்தால் என்ன தவறு?

தொகுதி மறுசீரமைப்பை விட்டுவிட்டால்கூட, பா.ஜ.க. எதிர்ப்பில் தீவிரமாக இருக்கும் கட்சி என்பதைக் காட்ட தி.மு.கவுக்கு இது உதவும். அதேபோல, 2026ல் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்டால், தங்களால்தான் அது நடந்தது என்று சொல்லவும் உதவும். எப்படிப் பார்த்தாலும் அது தி.மு.கவுக்கு சாதகமான நகர்வுதான்" என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Read Entire Article