ARTICLE AD BOX
ஒரு தனி மனிதன் வாழ்வில் தவறுகளை திருத்திக் கொண்டு, நேர்பட்ட வாழ்வு வாழ சுய கண்காணிப்பும், சுயஒழுக்கமும் மிகவும் தேவைப்படுகின்றன. அதேபோன்று பணியிடங்களில் தவறுகள் ஏற்படுவதை தடுத்து முறையாக நிர்வாகம் செய்ய ‘கண்காணிப்பு’ மிகவும் அவசியமாகிறது.
தவறு செய்வது மனித இயல்பு. அதை திருத்திக் கொள்வது அவனது கடமை. இந்நிலையில், ’கண்காணிப்பு’ என்பதன் நோக்கம் குறைகளை காண்பதற்காக அல்ல. காணும் குறைகளை களையவும், நிலைமையை மேம்படுத்துவதற்காக மட்டுமே ஆகும். பல சமயங்களில் நம் மனச்சான்றே, நமக்கு நல்ல கண்காணிப்பாளாராக செயல்பட்டு நேர்பட்ட வாழ்வை வாழ உதவுகிறது. ஆனால், மனிதனுக்கு பணத்தின் மீது பேராசை ஏற்படும்போது, அவனின் மனச்சான்று காணாமல் போகிறது. அங்குதான் நமக்கு ’கண்காணிப்பின்’ தேவை தொடங்குகிறது.
பொதுவாழ்வில் தலைவர்கள் ஊடகங்களால் கண்காணிக்கப்பட்டு அவர்கள் வைக்கும் விமர்சனங்களுக்கு பொறுப்பேற்கிறார்கள். இங்கு அவர்கள் மேலான கண்காணிப்பு, அவர்கள் தங்களின் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு தரப்படும் ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது.
தேர்வறைகளிலும், தேர்தல் நேரங்களிலும் கண்காணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் தற்காலங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. இந்நிலையில், ’கண்காணிப்பு’ என்பது நம் சொந்த வாழ்விலும், பொதுவாழ்விலும் பெருத்த முக்கியத்துவம் பெறுகிறது.
நமது தவறு செய்யும் ஆர்வத்திற்கு ’சுய கண்காணிப்பு’ தொடக்கத்திலேயே தடை போடுகிறது. ஆனால், இந்த ’சுய கண்காணிப்பு’ வயதானவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. குழந்தைகளுக்கு இது சாத்தியம் இல்லை. இந்த நிலையில் பெற்றோர்கள்தான் குழந்தைககளின் வளர்ச்சிக்கு தேவையானதை கண்காணித்து ஒரு குறிப்பிட்ட வயது வரை வளர்க்கிறார்கள்.
பிறகு குழந்தை பொது வெளியான பள்ளிக்கு வருகிறது. குழந்தைளின் எதிர்காலம் இங்குதான் நன்கு வார்க்கப்படுகின்றது. இங்கு அவர்களுக்கு அறிவும், ஒழுக்கமும், வாழ்வியல் திறமைகளும் கற்பிக்கப்படுகின்றன. இவற்றை அவர்கள் படிக்கும் வகுப்பின் நிலைக்கு ஏற்ப பெறவேண்டியது மிக முக்கியமாகும். இவற்றை அவர்கள் பெறுவதற்கு அவர்கள் மீதான ஆசிரியர் கண்காணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போதைய சமூக சூழலில் கணவன் மனைவி இருவருமே பணிக்கு செல்லும் நிலையில் குழந்தைகளை தனி படிப்புக்கு பெற்றோர்கள் அனுப்புகிறார்கள். அங்கு பெற்றோர்கள் தன்னுடைய குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். சமீப காலங்களில் நட்பு வட்டங்களால் அவர்கள் குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபட்டு வருவது வேதனைக்குரியது. ஊடகங்கள் இவற்றை நம் கவனத்திற்கு கொண்டு வரும் போது நாம் அதிர்ந்துதான் போகிறோம். இந்நிலையில் தன்னுடைய குழந்தைகள் நல்ல நட்புகளின் தொடர்புகளில் இருப்பதை பெற்றோர்கள் முறையான கண்காணிப்பின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
பணியிடங்களில் பணியாளர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட பணிகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடிப்பதை உறுதிப்படுத்தவே ’கண்காணிப்பாளர்கள்’ என்ற பதவியில் ஒருவர் அலுவலகங்களில் நியமிக்கப்படுகிறார். தொழிற்சாலைகளில் இயந்திரங்கள், உபகரணங்கள் போன்றவறை முறையாக இயங்குவதை உறுதிப்படுத்தவும், தொழிலாளர்கள் அவற்றை தேவையான முன்னெச்சரிக்கைகளுடன் பயன்படுத்தவும் ஒரு கண்காணிப்பாளர் தேவைப்படுகிறார்.
அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், முக்கியமான போக்குவரத்து சாலைகள், அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வலம் வரும் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பயன்படுத்தப்படுகின்றன. இவை குற்றம் ஏற்படாமலும் குற்றம் ஏற்பட்டால் செய்தவர் யார் என்பதை கண்டுபிடிப்பதிலும் காவல் துறைக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன.
யாரோ ஒருவர் நம்மை கண்காணிக்கிறார் என்பதை மக்கள் உணரும் பொழுது குற்றங்கள் குறைவது இயல்பானதே. ஆனால் அதையும் மீறி ஏடிஎம் போன்ற இடங்களில் கேமராக்களை மூடிவிட்டு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இவர்களை கண்காணிப்பதற்கு ஏடிஎம் மைய கண்காணிப்பு கேமரா பயன்படாத நிலையில் அருகில் ஏதேனும் ஒரு கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் காவல்துறைக்கு உதவிக்கு வருகின்றன. இவ்வகையில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
எனவே கண்காணிப்பு என்பது நமது வாழ்வில் சுய கண்காணிப்பாகவோ, கண்காணிப்பாளார் என்ற பெயரில் நமது வழிகாட்டியாகவோ நமது நல்வாழ்விற்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் நமது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் கண்காணிப்பினை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் அனைவரது முக்கியமான கடமையாகும்.