தொகுதி எல்லை நிர்ணய விவாதம்: மக்களவையின் தற்போதைய எண்ணிக்கை கல்வெட்டில் எழுதப்படட்டும்

20 hours ago
ARTICLE AD BOX

கட்டுரையாளர்: யோகேந்திர யாதவ், YOGENDRA YADAV

Advertisment

எல்லை நிர்ணயம் என்பது இந்திய யூனியனுக்கு இப்போது தேவையில்லாதது. எல்லை நிர்ணயத்தை இன்னும் 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு மாநிலத்தின் அல்லது ஒரு பிராந்தியத்தின் நலனைப் பாதுகாப்பது மட்டுமல்ல. இது தேசிய ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்துவதாகும். நாடாளுமன்ற தொகுதிகளை மறு நிர்ணயம் செய்வதை நிரந்தரமாக நிறுத்தி வைப்பது, ஏற்படக்கூடிய சவால்களுக்கு எதிராக இந்திய யூனியனைப் பாதுகாக்க உதவும். இந்திய யூனியனின் அடித்தளத்தில் மறைமுகமாக உருவாக்கப்பட்டுள்ள‌ "கூட்டாட்சி ஒப்பந்தத்தை" மதிக்க சிறந்த வழி, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒரு புனிதமான, அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை ஒருபோதும் மறுபரிசீலனைக்கு இடமில்லாமல் செய்தது போல, தற்போதைய மக்களவை இடங்களின் பகிர்வும் நிலையாக கற்களில் பொறிக்கப்பட வேண்டும்.

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

இது ஒரு வலுவான மற்றும் சற்றே அபூர்வமான கூற்றாகும். தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பவர்கள் பொதுவாக ஒரு நிரந்தர முடக்கத்தை விரும்ப மாட்டார்கள். அவர்களின் கேள்வி பொதுவாக "மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை" அடைவதில் சில மாநிலங்களின் வெற்றியைப் பற்றிய வரையறுக்கப்பட்ட மற்றும் குறைபாடுள்ள வாதத்தில் உள்ளது. ஒரு மறைமுகமான ஆனால் மீற முடியாத "கூட்டாட்சி ஒப்பந்தம்" என்ற கருத்து இந்த விவாதங்களில் இடம் பெறவில்லை. அத்தகைய கூற்று, இயற்கையாகவே, மோசமான கேள்விகளையும் ஆட்சேபனைகளையும் அழைக்கும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எழுத்துக்கும், அடிப்படைக்கும் எதிரானது அல்லவா? குடியரசாக பதவியேற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கூட்டாட்சி ஒப்பந்தத்தைப் பற்றி ஏன் நினைக்க வேண்டும்? இவை நேர்மையான பதில்களைக் கோரும் முக்கியமான கேள்விகளாகும்.

Advertisment
Advertisements

இந்த சிக்கலை தெளிவு படுத்துவதன் மூலம் நமது கட்டுரையைத் தொடங்குவோம். தற்போதைய விவாதமும் தற்போதைய வாதமும் புதிய தொகுதிகளின் "எல்லை நிர்ணயத்தின்" இரண்டு கூறுகளில் ஒன்று மட்டுமே. ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்வதோ அல்லது எந்த மாநிலத்துக்குள்ளும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ வழக்கமான நடைமுறையில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. இது கூட்டாட்சி சமநிலையை பாதிக்காது. 50 ஆண்டுகளுக்கு முன்பு முடக்கப்பட்ட வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இடங்களை மறுபகிர்வு செய்வதுதான் உண்மையான பிரச்சினை. நாம் அதை திறக்க வேண்டுமா? அல்லது முடக்கத்தை நீடிக்க வேண்டுமா? அல்லது நிரந்தர முடக்கத்திற்கு செல்ல வேண்டுமா? அதுதான் விவாதம்.

வழக்கமான தொகுதி மறுசீரமைப்பு பற்றிய அசல் அரசியலமைப்பு விதியானது "ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு" என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதை அங்கீகரிக்க வேண்டும். ஒரு தொகுதியின் ஒவ்வொரு உறுப்பினரும் ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான நபர்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதை இந்த ஜனநாயகக் கோட்பாடு கட்டாயமாக்குகிறது. கடுமையான வேறுபாடுகள் இருந்தால், பெரிய தொகுதிகளில் உள்ள வாக்குகளின் மதிப்பு சிறிய தொகுதிகளை விட குறைவாக இருக்கும். உதாரணமாக, லோக்சபாவில் உத்திரப் பிரதேசத்தில் 32 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒரு எம்.பி.யை பெறும் நிலையில், கேரளாவில் 18 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ள மக்கள் ஒரு எம்.பி.,யை பெறுகின்றனர். எனவே, கேரளாவில் உள்ள ஒரு வாக்கின் மதிப்பு, உ.பி.யில் வசிக்கும் ஒருவரின் மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகம்‌ ஆகும். இது ஒரு சீரற்ற நிலையாகும், இது வேறு வலுவான பரிசீலனைகள் இல்லாவிட்டால் சரி செய்யப்பட வேண்டும். மக்கள்தொகையில் உள்ள பங்கை விட மக்களவையில் அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட சிறிய மாநிலங்களில் (கோவா மற்றும் அருணாச்சலத்தில் ஒரு இருக்கைக்கு 8 லட்சத்திற்கும் குறைவானது) இந்த கொள்கையிலிருந்து விலகுவதற்கு அரசியலமைப்பு வழிவகை செய்துள்ளது. இந்த நிகழ்வுகளில், "சமச்சீரற்ற கூட்டாட்சி" கொள்கை, ஒரு கூட்டமைப்பின் பல்வேறு பிரிவுகளுக்கான சிறப்பு அரசியலமைப்பு பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக, சாதாரண ஜனநாயகக் கொள்கையை விட்டுவிட அனுமதிக்கப்பட்டது.

எனது வாதம் என்னவென்றால், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் எதிர்பார்க்காத மற்றும் எதிர்பாராத ஒரு யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதற்காக இந்த விதிவிலக்கு இப்போது பொதுமைப்படுத்தப்பட வேண்டும். இது மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் வெற்றி தோல்வியைப் பற்றியது அல்ல. பிறப்பு விகிதமும் இறப்பு விகிதமும் மக்கள்தொகை மாற்றத்தின் பெரிய வடிவங்களைப் பின்பற்றுகின்றன, அங்கு வசதி படைத்த மாநிலங்கள் மற்றும் அங்குள்ள சமூக உயர்வுகள் மக்கள்தொகையில் விரைவான சரிவைக் காண்கின்றன. இதற்காக அரசாங்கங்கள் அந்த வெற்றியை தனதென்பது சரியாக இருக்காது. தவிர, எந்தவொரு ஏழை மற்றும் பின்தங்கிய குழுவிற்கு எதிராக வாதிடுவதற்கு இந்த நியாயத்தை நீட்டிக்க முடியும். என்னுடைய வாதம் வேறு.

அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியதிலிருந்து, கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகிய மூன்று பிளவுகள் ஆழமாவதையும் அவற்றை ஒருங்கிணைப்பதையும் இந்தியா கண்டுள்ளது. ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில் இது தீவிரமடைந்துள்ளது. இச்சூழலில், புதிய எல்லை நிர்ணயம் மூலம் நாடாளுமன்ற இடங்களை மறுவரையறை செய்வது, நான்காவது பிளவை உருவாக்கி விட அச்சுறுத்துகிறது. இது தேசிய ஒற்றுமையின் உணர்வை குறைத்து மதிப்பிட உட்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் நீண்ட கால எதிர்காலத்தில் அக்கறையுள்ள எவரும் ஏற்கனவே உள்ள மூன்று பிளவுகளை சரிசெய்ய வேண்டும், எப்படியிருந்தாலும், அவற்றுடன் ஒத்துப்போகும் நான்காவது பிளவை உருவாக்கக்கூடாது. எனவேதான் இந்த தொகுதி எண்ணிக்கை முடக்கத்திற்கான முன்மொழிவு.

முதலாவதான கலாச்சார பிளவு, இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களுக்கும் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள இந்தி பேசாத மாநிலங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உள்ளடக்கியது. இந்த வேறுபாடு ஆரம்பத்திலிருந்தே இருந்தது மற்றும் பிரிவினைக்குப் பிறகு வலியுறுத்தப்பட்டது.  ஆனால், மொழிவாரி மாநிலக் கோரிக்கையை ஏற்று, இந்தியை மட்டும் ஆட்சி மொழியாகத் திணிக்காமல் பிரிவினையாக மாறுவதை நமது அரசியல் தலைமை அனுமதிக்கவில்லை. கடந்த மூன்று தசாப்தங்களாக பொருளாதார வளர்ச்சியின் முறை தென்மேற்கு இந்தியாவிற்கும் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவிற்கும் இடையே வெளிப்படையான சமத்துவமின்மையை உருவாக்கியுள்ளது. சுவாரஸ்யமாக, மொழியியல் பிளவினால் பாதிக்கப்படும் பகுதிகள் இந்தப் பொருளாதாரப் பிரிவின் மேலாதிக்கம் கொண்டுள்ளன.

இறுதியாக, பா.ஜ.க.,வின் எழுச்சியுடன், பா.ஜ.க மேலாதிக்கம் கொண்டுள்ள வட இந்திய மாநிலங்களுக்கும் அது தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள போட்டியிடும் மாநிலங்களுக்கும் (கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம், தெலங்கானா) மற்றும் அது சிறிய அளவில் இருக்கும் (ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா) மாநிலங்களுக்கும் இடையே மற்றொரு அரசியல் பிளவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று பிளவுகளும் முழுமையாக ஒத்துப்போவதில்லை, இந்தி பிராந்தியங்களும் தென்னிந்திய மாநிலங்களும் எப்போதும் இந்த மூன்று பிளவுகளின் எதிர் பக்கங்களிலேயே உள்ளன.

எல்லை நிர்ணயத்தின் உண்மையான ஆபத்து என்னவென்றால், அது இந்த (பிளவுபட்ட) போக்கை மேலும் வலுப்படுத்தக்கூடிய நான்காவது பிளவை உருவாக்கும். மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜேமி ஹிண்ட்சன் ஆகியோரின் பகுப்பாய்வு, 2026 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையின் விகிதத்தில் மக்களவைத் தொகுதிகள் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டால் இதற்கு (மற்றொரு பிளவுக்கு) சாத்தியமான சூழலைக் காட்டுகிறது. இந்தச் சூழ்நிலையில், அனைத்து தென்னிந்திய மாநிலங்களும்  - கேரளா (எட்டு இடங்கள் குறைவு) தமிழ்நாடு (எட்டு இடங்கள் குறைவு), ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா (ஒன்றாக எட்டு இடங்கள் குறைவு), கர்நாடகா (இரண்டு இடங்கள் குறைவு) - பாதிக்கப்படும். மற்ற பெரிய அளவில் பாதிக்கப்படும் மாநிலங்களும் இந்தி பேசாத மாநிலங்களே: மேற்கு வங்கம் (நான்கு இடங்கள் குறைவு), ஒடிசா (மூன்று இடங்கள் கீழே), மற்றும் பஞ்சாப் (ஒரு இடம் கீழே). ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகாண்ட் (தலா ஒரு இடம் குறைவு) தவிர, வட இந்திய இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே மிகப் பெரிய அளவில் பயனடையும்: உத்தரப் பிரதேசம் (11 இடங்கள்), பீகார் (10 இடங்கள்), ராஜஸ்தான் (ஆறு இடங்கள்) மற்றும் மத்தியப் பிரதேசம் (நான்கு இடங்கள் வரை). இந்தி மற்றும் இந்தி அல்லாத மொழி பேசும் மாநிலங்களுக்கு இடையே, குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே ஏற்கனவே உள்ள பலவீனமான சமநிலையை தீவிரமாக சீர்குலைக்க இது காரணமாகும். ஏற்கனவே 543 இடங்களில் 226 இடங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் "இந்தி பிராந்தியங்கள்" இப்போது 259 இடங்களைக் கொண்டிருக்கும், கிட்டத்தட்ட மக்களவையின் பெரும்பான்மை. எந்தவொரு பெரிய அரசியலமைப்புத் திருத்தத்தையும் வீட்டோ செய்ய ஒரு பெரிய கிழக்கு அல்லது மேற்குப் பகுதி மாநிலத்துடன் கைகோர்க்கக் கூடிய தென் மாநிலங்கள் (தற்போது 132 இடங்கள்) புதிய எல்லை நிர்ணயத்திற்குப் பிந்தைய ஏற்பாட்டின் கீழ் இந்த முக்கியமான சாத்தியத்தை இழக்கும்.

இது இந்திய யூனியனின் அடிப்படை மெய்க்கருத்தான ஆதிக்கமின்மை மற்றும் அது தெரிவித்த வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்துக்கு எதிரானது. இந்த அடிப்படைக் கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமெனில், நமது அரசியலமைப்பில் உள்ளடங்கிய ஒரு அடிப்படை சமூக ஒப்பந்தத்தை, ஒரு கூட்டாட்சி ஒப்பந்தத்தை முன் வைக்க வேண்டும். அத்தகைய ஒப்பந்தம் எழுதப்படுவதற்கு இந்தியா "ஒன்றாக வந்த" (தானாக ஒன்று சேர்ந்த) கூட்டமைப்பு அல்ல. ஆனால் நாம்  "ஒன்றாகத் தக்க வைத்திருக்கும்" கூட்டமைப்பாக இருக்கிறோம், அங்கு கூட்டாட்சி ஒப்பந்தம் மறைமுகமானது ஆனால் அதுவே அஸ்திவாரம் ஆகும். இந்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்வது என்பது மக்கள் தொகை அடிப்படையிலான அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் கூட்டாட்சி வளங்களில் வரி பங்களிப்பு அடிப்படையிலான பங்கு ஆகிய இரண்டு முக்கியமான உரிமை கோரல்களை நிரந்தரமாக முடித்து வைக்க உதவும்:  இந்தி பேசும் மற்றும் இந்தி அல்லாத மாநிலங்கள் ஒரு வகையில் நஷ்டமடைந்தாலும், மற்றொரு வகையில் லாபமடைவதாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் மீதான தேசிய ஒருமித்த கருத்து, தேர்தல் ஆதாயங்கள் மற்றும் இழப்புகளின் குறுகிய கால கணக்கீடுகளைத் தவிர்த்து, இந்தியக் குடியரசின் அடிப்படைக் கொள்கையான பார்த்தா சாட்டர்ஜி குறிப்பிட்ட அந்த "நியாயமான குடியரசை" நோக்கி செல்லும் ஒரு படியாக இருக்கும்.

யோகேந்திர யாதவ், ஸ்வராஜ் இந்தியாவின்  உறுப்பினர் மற்றும் பாரத் ஜோடோ அபியானின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

மொழிபெயர்ப்பு: எம். கோபால் 

Read Entire Article