ARTICLE AD BOX
செய்தியாளர்: காளிராஜன் த
சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில், திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் கஞ்சா சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வண்டியில் பயணம் செய்த கன்னியாகுமரியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (44) என்பவர் காவல்துறையினரை கண்டதும் தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்நிலையில், அவரை சோதனை செய்தபோது, அவரிடம் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 13 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வெளிநாட்டு பணத்தை சென்னையில் மாற்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 13 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து நவநீதகிருஷ்ணனை மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.