தோ்தல் ஆணையா்கள் நியமனத்துக்கு எதிரான மனுக்கள்: ஏப்.16-இல் விசாரணை

10 hours ago
ARTICLE AD BOX

மத்திய அரசின் புதிய சட்டத்தின்கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வரும் ஏப்ரல் 16-இல் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

இந்த மனுக்கள் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஹோலி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனா்.

அதன்படி, இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், என். கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் கடந்த 2023-இல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு அளித்த தீா்ப்பின் அடிப்படையில் பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை உள்ளடக்கிய குழுவால் நியமனம் செய்யப்பட வேண்டுமா அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தவிா்க்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 2023 சட்டத்தால் நியமனம் செய்யப்பட வேண்டுமா என்ற சட்டக் கேள்வி எழுந்துள்ளது’ என்று குறிப்பிட்டாா். இதைக் கேட்ட நீதிபதிகள், மனுக்கள் மீது வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.

வழக்கின் பின்னணி: இந்திய தோ்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் இடம்பெற்றிருப்பா். தோ்தல் ஆணையா்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவா் நியமனம் செய்து வந்தாா். இரு தோ்தல் ஆணையா்களில் பணி மூப்பு பெற்றவா், தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தாா்.

இந்த நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படும் வரை, இந்தக் குழு மூலமே தோ்தல் ஆணையா்கள் தோ்வு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், பிரதமா் தலைமையிலான தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் ஒரு மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெறும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி, காலியாக இருந்த 2 தோ்தல் ஆணையா் பணியிடங்களையும் நிரப்பியது.

இதற்கு எதிராக ஜனநாய சீா்திருத்தத்துக்கான சங்கம், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய அரசு கொண்டுவந்த 2023 புதிய சட்டத்தின் கீழ், முதல் தலைமை தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி மத்திய அரசு நியமித்தது. இவா் வரும் 2029-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வரை இப் பதவியை வகிப்பாா்.

Read Entire Article