ARTICLE AD BOX
ஈரோடு: ஈரோட்டில் நுழைவுச்சீட்டு இன்றி தேர்வு மையம் மாறி வந்த தனித்தேர்வர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் ஜீப் மூலம் அழைத்து சென்று, அவர்களது தேர்வு மையத்தில் இறக்கி விட்டு, தேர்வு எழுத நடவடிக்கை எடுத்தார். ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத அரசு ஐடிஐ சீருடை அணிந்தபடி 3 பெண் தனித்தேர்வர்கள் வந்தனர். அப்போது, அவர்களிடம் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது இருந்த ஆவணங்களும், தேர்வு எண் குறிப்பிட்ட ஒரு சீட்டும் இருந்தது.
ஆனால், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இல்லை. இதனால், அவர்கள் தேர்வு மையத்தில் குழப்பத்துடன் நின்றிருந்தனர். இதையடுத்து தேர்வு மையத்தில் இருந்த ஆசிரியைகளிடம் நுழைவுச்சீட்டு இல்லாமல் இருப்பதை தெரிவித்துள்ளனர். அங்கு இருந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், இதையறிந்து தனித்தேர்வர்களிடம் அவர்களிடம் இருந்த ஆவணத்தை பரிசோதித்து உடனடியாக, அப்பள்ளியின் அலுவலகத்தில் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து அவர்களிடம் வழங்கினார். மேலும், அதில், அவர்களுக்கான தேர்வு மையம் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்குந்தர் மாணவர்கள் பள்ளி ஒதுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தார்.
அந்த மையத்திற்கு நடந்து சென்றால் தனித்தேர்வர்களால் உரிய நேரத்தில் செல்ல முடியாது என்பதை உணர்ந்த, முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக தனித்தேர்வர்களான தேன்மொழி, ப்ரீத்தி, நிர்மலா உட்பட 3 பேரையும், அவரது ஜீப்பில் அழைத்து சென்று, அவர்களுக்கான தேர்வு மையத்தில் இறக்கி விட்டார். தொடர்ந்து, தேர்வு அறைக்கு சென்று நன்றாக தேர்வு எழுதிடவும் அறிவுறுத்தினார். தேர்வு மையம் மாறி வந்த தனித்தேர்வர்கள் 3 பேரை, முதன்மை கல்வி அலுவலர் அவரது ஜீப்பில் அழைத்து சென்று, தேர்வு மையத்தில் இறக்கி விட்ட சம்பவம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.
The post தேர்வு மையம் மாறி வந்த தனித்தேர்வர்களை ஜீப்பில் அழைத்து சென்ற சிஇஓ appeared first on Dinakaran.