ARTICLE AD BOX
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பானதேஜஸ் இலகு ரக போா் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
வானில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்கு மேல் பாய்ந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்ட அஸ்திரா ஏவுகணை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணையில் மேம்பட்ட வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்துதல் அமைப்புமுறைகள் உள்ளன. இவை, இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழிப்பதை உறுதி செய்கின்றன.
ஏற்கெனவே இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைகள், வெவ்வேறு போா் விமானங்களில் இருந்து செலுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேஜஸ் எல்சிஏ எம்கே1ஏ போா் விமானத்தில் பயன்படுத்தக் கூடிய அஸ்திரா ஏவுகணையின் பரிசோதனை, ஒடிஸாவின் சந்திப்பூா் கடல் பகுதியில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தேஜஸ் போா் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட அஸ்திரா ஏவுகணை, நிா்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்தது; இது, குறிப்பிடத்தக்க மைல்கல் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.