ARTICLE AD BOX
’தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால், வரலாறு மாற்றப்படும். கெட்டவர்கள் நல்லவர்களாகவும், நல்லவர்கள் கெட்டவர்களாகவும் காட்டப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு:-
பி.எம்.ஸ்ரீ பள்ளி என்ற திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறது. தரமான கல்வியை வழங்குவதுதான் இதன் நோக்கம் என்கிறார்கள். அப்படியென்றால் தமிழ்நாடு ஏற்கெனவே தரமான கல்வியை தான் வழங்குகிறது. கூடுதலாக என்ன தரம் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையை பி.எம்.ஸ்ரீ திட்டம் மூலம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறது. 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறையை கொண்டு வருவது உள்ளிட்ட திட்டங்கள் இதில் உள்ளது.
மீண்டும் மொழிப்போர் கூடாது
இந்தியாவிலேயே இடைநின்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது 16 சதவீதமாக இருந்த இடைநின்றல் 5 சதவீதமாக குறைந்து உள்ளது. மீண்டும் ஒரு மொழிப்போர் வரக்கூடாது என்கிற விதத்தில் எங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறோம். ஒன்றிய கல்வி அமைச்சர் இது குறித்து கடிதம் எழுதி உள்ளார். அதில் தமிழை பற்றிய பெருமைகளை பிரதமர் முன்னெடுப்பதாக அதில் கூறி உள்ளார். மேலும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு கையெழுத்து போட வேண்டும் என்று கூறுகிறார். இளைய சமுதாயத்தை மனதில் வைத்து புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டு உள்ளது என்றால் அதில் நிபந்தனைகள் விதிக்க கூடாது.
மீன் சிக்காத என பார்க்கின்றனர்
கல்வி விவகாரத்தில் தமிழ்நாடு எதையும் சாதிக்காமலா உள்ளது. இருமொழிக் கொள்கையில் படித்த பிள்ளைகள் பல்வேறு துறைகளில் உயர்ந்து நிற்கின்றனர். பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம், விண்வெளி துறைகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர். தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் போது இரு மொழிக் கல்வியில் படித்து சாதித்தவர்களின் கருத்தை கேட்டு முடிவு செய்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். ஆனால் எதையும் செய்யாமல், நீங்களாக திட்டத்தை வரவு செய்து உள்ளீர்கள். தூண்டில் போட்டுவிட்டு மீன் ஏதும் சிக்காதா என்று பார்ப்பது போல் உள்ளது மத்திய கல்வி அமைச்சரின் கடிதம்.
1968ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. உலகின் பழமையான உயிர்ப்புள்ள மொழிகளில் ஒன்றான தமிழை பாதுகாக்க இது உறுதி பூண்டு உள்ளது. இருமொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் உடன் ஒப்பீடு செய்கையில் படிப்பறிவு விகிதத்தையும், கல்வி சாதனைகளையும் அளித்து உள்ளது.
தமிழ் அடையாளத்திற்கு எதிரான அத்துமீறல்
தமிழை தாய் மொழியாகவும், ஆங்கிலத்தை உலக இணைப்பு மொழியாகவும் மையப்படுத்தி உள்ளூர் தேவைகளுக்கும், சர்வதேச போட்டி திறனுக்கும் இடையே சமநிலையை உண்டாகி உள்ளது. மாணவர்களை மூன்றாவது மொழியால் அலைக்கழிக்காமல், கடந்த 50 ஆண்டுகளாக சமூக, பொருளாதார மாற்றத்தை தந்து உள்ளது. இந்திய அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலில் கல்வி உள்ளது. மூன்று மொழிக் கொள்கையை நிராகரிப்பது கூட்டாட்சி கொள்கை உடன் ஒத்துப்போகிறது. மூன்றாவது மொழியை திணிப்பது அரசியலமைப்பு சட்டத்தையும் மாநில உரிமையையும் மீறுகிறது. மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியாக பார்க்கப்படுகிறது. தமிழ் அடையாளத்திற்கு எதிரான அத்துமீறல் இது.
வரலாறு மாற்றப்படும்
மூன்றாவது மொழியை அறிமுகம் செய்வது, இந்தி தவிர பிற மொழிகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் உண்டாகும். இது இந்தியை கற்க வற்புறுத்தும் செயலாக அமைந்துவிடும். இந்தியாவில் 56 மொழிகள் இந்தியால் விழுங்கப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதானின் மாநிலமான ஒரிய மொழி உட்பட பல்வேறு மொழிகள் இந்தி திணிப்பால் அழிக்கப்பட்டு உள்ளது. அது போன்ற நிலை நமது தாய் மொழிக்கும் வந்துவிடக் கூடாது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால், வரலாறு மாற்றப்படும். நல்லவர்கள் கெட்டவர்களாகவும், கெட்டவர்கள் தியாகிகளாகவும் காட்டப்படுவார்கள்.
