ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: கவர் டிரைவ் எனது பலவீனம், ஆனால்... விராட் கோலி கூறியதென்ன?
வங்கதேசம் - 236/9
வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தான்சித் ஹாசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ களமிறங்கினர். நிதானமாக விளையாடிய தான்சித் ஹாசன் 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஒரு புறம் கேப்டன் ஷாண்டோ ரன்கள் குவிக்க, மறுமுனையில் வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். மெஹிதி ஹாசன் மிராஸ் 13 ரன்கள், தௌகித் ஹிரிடாய் 7 ரன்கள் மற்றும் முஸ்ஃபிகுர் ரஹிம் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து, கேப்டன் ஷாண்டோவுடன் ஜேக்கர் அலி ஜோடி சேர்ந்தார். இந்த இணை அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தியது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 110 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். ஜேக்கர் அலி 55 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ரிஷாத் ஹொசைன் 26 ரன்களும், டஸ்கின் அகமது 10 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: உள்ளூர் போட்டிகள் குறித்த பிசிசிஐ-ன் முடிவு சரியானதா? ஷிகர் தவான் பதில்!
இறுதியில் வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வில்லியம் ஓ’ரூர்க் 2 விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி மற்றும் கைல் ஜேமிசன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.