ARTICLE AD BOX
மனித இனம் நதிகளின் கரைகளில் பரிணமித்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. நதிகளின் அழிவு மனித நாகரிகத்தின் அழிவாகவே கருதப்படுகிறது.
சென்னையின் முக்கிய அடையாளமாக திகழ்வது அடையாறு நதி. இந்த ஆறு சென்னை நகரில் ஓடும் மூன்று ஆறுகளில் ஒன்று ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் மணிமங்கலம் கிராமம் மலைப்பட்டு குளத்தில் இருந்து அடையாறு நதி பிறக்கிறது. இது சுமார் 42.5 கிலோமீட்டர் அல்லது 26.4 மைல் நீளம் பாய்ந்து கடலில் கலக்கிறது.
இது காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டம் வழியாக சுமார் 42.5 கிலோமீட்டர்கள் (26.4 மைல் நீளம்) ஆறாக ஓடி சென்னையில் உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அடையாறு நதியின் ஆழம் மேற்புறப் பகுதிகளில் சுமார் 0.75 மீட்டர்கள் வரையும் கீழ்ப்புறப்பகுதிகளில் சுமார் 0.5 மீட்டர்கள் வரையும் மாறுபடுகிறது. ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 530 சதுர கிலோமீட்டர்கள் (200 சதுர மைல்) ஆகும்.
ஆற்றுப்படுகை 10.5 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை அகலம் கொண்டதாக உள்ளது. சென்னை பெருநகரப் பகுதியில் அடையாறு ஆறு சுமார் 24 கிலோமீட்டர் தொலைவுக்குப் பாய்கிறது.
ஆண்டுதோறும் அடையாறு ஆறு 190 முதல் 940 மில்லியன் கனசதுர மீட்டர் தண்ணீரை வங்கக் கடலுக்குள் அனுப்புகிறது. அடையாறு ஆற்றில் இருந்து செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆண்டு சராசரியை விட 7 முதல் 33 மடங்கு அதிகமான தண்ணீரை வங்கக் கடலுக்குள் வெளியேற்றுகிறது. 40 குளங்களில் இருந்து பெறும் உபரி தண்ணீர் ஆற்றின் வழியாக ஓடுகிறது.
இந்த ஆறு கடந்து செல்லும் அடையாறு ஆற்றுப்படுகை சுமார் 860 சதுர கிலோமீட்டர் அல்லது 331 சதுரமைல் பரப்பளவை கொண்டது. நகரத்திலிருந்து பெரும்பாலான கழிவுகள் இந்த நதியில் வடிகட்டப்படுகின்றன. நகரத்தின் மழைநீர், சிறிய ஓடைகள் நீர், ஏரிநீர், போன்ற இடங்களிலிருந்து வரும் உபரி நீர் இந்த ஆற்றில் கலக்கிறது.
60 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆறு தெளிந்த நீரோட்டம் கொண்ட நதியாகவும், ஆயிரக்கணக்கான உள்ளூர் மீனவர்களின் மிகப்பெரிய வாழ்வாதாரமாகவும் விளங்கியது. இந்த அறு கடலுடன் சேரும் கழிமுகத்தில் வஞ்சிரம் உள்பட பல வகையான கடல் மீன்கள் தூண்டில் மற்றும் வலை கொண்டு பிடிக்கப்பட்டு வந்ததாகவும், கழிமுகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்நாட்டு மீன் வளம் அதிக அளவில் இருந்ததாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன. இந்த மீன்களை இரையாக்க விதவிதமான பறவைகள் குவிந்தன. 1950, 1960-களில் இந்த ஆற்றில் படகு சவாரி பிரபலமான ஒன்றாக இருந்துள்ளது.
அடையாறு கழிமுகப்பகுதி சரணாலயம் பல்வேறு பறவைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு புகலிடமாகவும் இருந்து வந்தது. ஆனால், நகரமயமாக்கலால் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நகரத்தின் கழிவுநீர் மற்றும் அதன் பல்வேறு தொழில்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் சில காலம், ஆற்றில் கலந்து இப்பகுதியின் உயிரியல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
மழைக்காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் இந்த நதி கிட்டத்தட்ட தேங்கி நிற்கிறது. விரைவான தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் இந்த ஆற்றை கடுமையான மாசுபாட்டிற்கு வழிவகுத்துள்ளது. அதிக மாசு அளவு இருந்தபோதிலும், இந்த ஆற்றில் படகு சவாரி மற்றும் மீன்பிடித்தல் நடைபெறுகிறது.
மாசுபாடு மற்றும் மானுடவியல் நடவடிக்கைகள் காரணமாக உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. காலப்போக்கில் கழிவுகள் கலந்ததால் பொலிவை இழந்து அழியும் நதிகள் பட்டியலில் இடம் பெறும் நிலைக்கு அடையாறு நதி தள்ளப்பட்டது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (TNPCB) சமீபத்திய அறிக்கையின்படி, அடையாறு ஆற்றில் மலக் கோலிஃபார்மின் அளவு பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான வரம்பை விட 10 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 2024-ல் அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவில் காணப்பட்ட மீன்கள் இறப்பதற்கு இந்த குறிப்பிடத்தக்க மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆறு மீண்டும் பொலிவு பெற்றால், சென்னையின் அழகு பல மடங்கு உயரும் என்பதில் மாற்றமில்லை. நடக்குமா?