ARTICLE AD BOX
நாகா்கா்னூல்: தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணி 10 நாள்களைக் கடந்தும் சவாலாக இருந்து வரும் சூழலில், மீட்புப் பணியில் தானியங்கிகளைப் (ரோபா) பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.
சுரங்கத்துக்குள் அதிக அளவில் சேறும், தண்ணீரும் நிறைந்திருப்பதால் மீட்புப் பணி சவாலாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்.22-ஆம் தேதி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். அவா்கள் உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களை மீட்கும் பணிகள் 10 நாள்களைக் கடந்துள்ளது.
இதுகுறித்து நாகா்கா்னூல் காவல் கண்காணிப்பாளா் வைபவ் கெய்க்வாட் கூறுகையில், ‘சுரங்கத்துக்குள் அதிக அளவில் தண்ணீரும் சேறும் நிறைந்திருப்பதால் மீட்புப் பணி சவாலாகியுள்ளது. எனவே, மீட்புப் பணியில் தானியங்கிகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நபா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தானியங்கிகளை பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். மீட்புப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சேறு மற்றும் தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் தொடா்ந்து வருகின்றன’ என்றாா்.