ARTICLE AD BOX
புதிய வருமான வரி முறையில்.. இந்த 3 சலுகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!
சென்னை: இந்தியாவில் இரண்டு வழிமுறைகளில் தனி நபர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய முடியும். ஒன்று பழைய வரிக்கணக்கு தாக்கல் முறை, மற்றொன்று புதிய வரி கணக்கு தாக்கல் முறை.
மத்திய அரசினை பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் புதிய வரி கணக்கு தாக்கல் முறைக்கு மாற வேண்டும் என எண்ணுகிறது. இதற்காக புதிய வரி கணக்கு தாக்கல் முறையில் பல்வேறு வருமான வரி சலுகைகளையும் அறிவித்து வருகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவில் வரி செலுத்துபவர்களில் சுமார் 72% பேர் புதிய வரி கணக்கு தாக்கல் முறைக்கு மாறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக புதிய வரி கணக்கு நடைமுறைக்கும் பழைய வரி கணக்கு நடைமுறைக்கும் இடையிலே இருக்கக்கூடிய மிகப்பெரிய வித்தியாசம் வருமான வரி சலுகைகள். பழைய வரிக்கணக்கு நடைமுறையில் பிரிவு 80சி-இன் கீழ் பல்வேறு முதலீடுகளையும் பங்களிப்புகளையும் குறிப்பிட்டு நாம் வருமான வரி விலக்கு பெற முடியும் . ஆனால் புதிய வரி கணக்கு நடைமுறையில் அவை இல்லை என்ற கருத்து நிலவுகிறது.
இந்த புதிய வரி கணக்கு நடைமுறையிலும் மூன்று முக்கியமான வரி சலுகைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். மத்திய அரசு வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக தான் புதிய வரி கணக்கு நடைமுறையை கொண்டு வந்தது. 2024 -25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்த 7.28 கோடி பேரில் 5.27 கோடி பேர் புதிய வரி கணக்கு நடைமுறையை தேர்வு செய்துள்ளனர், 2.01 கோடி பேர் பழைய வரி கணக்கு முறையை தேர்வு செய்துள்ளனர்.
புதிய வரி கணக்கு நடைமுறையில் வீட்டு வாடகை கொடுப்பனவு , விடுமுறை கால பயணத்துக்காக வழங்கப்படும் கொடுப்பனவு மற்றும் 80 சி பிரிவின் கீழ் கிடைக்கும் பலன்கள் கிடைப்பதில்லை. ஆனால் மற்ற மூன்று முக்கியமான வரிச் சலுகைகளை புதிய வரி கணக்கு நடைமுறையிலும் பெற முடியும்.
1.நிலையான வரிக் கழிவு :
ஓய்வூதியதாரர்கள் மற்றும் சம்பளதாரர்களுக்கு புதிய வரி கணக்கு நடைமுறையிலும் 75,000 ரூபாய் வரை நிலையான வரிக் கழிவு கிடைக்கிறது. இது வரிக்கு உட்பட்ட வருமானத்தை தானாகவே குறைக்கிறது. இதனால் வரிச் சுமையும் குறைந்து விடுகிறது.
2. தேசிய ஓய்வூதிய திட்டம் :
தனியார் நிறுவன ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்திடம் இருந்து பங்களிப்பை பெற்றால் அவர்கள் புதிய வரி கணக்கு நடைமுறையில் இந்த வரிச்சலுகையை பெறலாம். பிரிவு 80CCD(2)இன் கீழ் வரி விலக்கு கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் மொத்தத்தில் 10% வரையும், அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படையில் இருந்து 14 % வரையும் வரி விலக்கு கிடைக்கும்.
3.பணிக்கொடை:
பிரிவு 10(10)இன் கீழ் ஓய்வுபெறும் போது தனியார் ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கும் பணிக்கொடைக்கு வரி சலுகை பெறலாம். தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்தவர்களுக்கு அவர்கள் பணியில் இருந்து விலகும் போதோ அல்லது ஓய்வுபெறும் போதோ பணிக்கொடை வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களை பொறுத்தவரை அவர்கள் பெறக்கூடிய மொத்த பணிக்கொடையுமே வரிவிலக்கு பெற்றது தான். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 20 லட்சம் வரையிலான பணிக்கொடை தொகைக்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை.
Story written by: Devika