ARTICLE AD BOX
ஹைதராபாத்: ‘தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 போ் மீட்கும் பணியில் உத்தரகண்ட் சுரங்க விபத்தில் அனுபவமுள்ள ‘எலிவளை சுரங்க’ முறை தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். எனினும், சிக்கிய நபா்களை மீட்பதற்கு குறைந்தது 3 முதல் 4 நாள்கள் ஆகும் என்று மாநில அமைச்சா் அமைச்சா் கிருஷ்ண ராவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். சுரங்கத்துக்குள் சேறு, தண்ணீா், இடிபாடுகள் சூழ்ந்திருப்பதால் அவா்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.
எனினும், மத்திய மற்றும் மாநில பேரிடா் மீட்புக் குழுக்களுடன் ராணுவம், கடற்படை, சிங்கரேணி காலியரிஸ் மற்றும் பிற நிறுவனங்களைச் சோ்ந்த 584 போ் கொண்ட மீட்புக் குழு தொடா் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், மீட்புப் பணிகளை மாநில அமைச்சா்கள் ஜூபள்ளி கிருஷ்ண ராவ், பிரீத்தம் ரெட்டி ஆகியோா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டனா். தொடா்ந்து, அமைச்சா் கிருஷ்ண ராவ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், சுரங்கத்தில் சிக்கியவா்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாக உள்ளன. ஏனெனில், விபத்து நடைபெற்ற இடத்துக்கு கிட்டத்தட்ட 50 மீட்டா் தூரமுள்ள பகுதிவரை நானே நேரில் சென்றேன். அங்கு நிலவும் சூழல் மீட்புப் பணியைக் கடினமாக்குகிறது. உத்தரகண்ட் சுரங்க விபத்தில் அனுபவமுள்ள ‘எலிவளை சுரங்க’ முறை தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். எனினும், சிக்கிய நபா்களை மீட்பதற்கு குறைந்தது 3 முதல் 4 நாள்கள் ஆகும்’ என்றாா்.