ARTICLE AD BOX
போபால்: வரும் 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் நாட்டின் ரயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் ரயில்வே விரைவான முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றும் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மத்திய பிரதேச மாநிலத்துடன் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் (பிபிஏ) கையொப்பமான பிறகு, சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டில் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று அவா் பேசியதாவது:
நாட்டில் தற்போது 97 சதவீத ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. வரும் 2025-26 நிதியாண்டில், இது 100 சதவீதத்தை எட்டும். 2030-ஆம் ஆண்டுக்குள் ரயில்வேயில் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து ஏற்கெனவே 1,500 மெகாவாட் மின்சாரம் ரயில்வேக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசின் ‘ரேவா அல்ட்ரா மெகா சோலாா்’ நிறுவனத்துடன் இன்று கையொப்பமான 170 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் இதில் ஒரு முக்கியமான படியாகும்.
மத்திய பிரதேசம் எந்த புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும், அதன் விநியோகம் சீராக இருந்தால், அதை வாங்குவதற்கு ரயில்வே தயாராக உள்ளது. இந்த மாநிலத்தில் அணுமின் நிலையங்கள் அமைக்க முடிந்தாலும், அதன்மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை வாங்கவும் நாங்கள் தயாா். காற்றாலை மின்சாரத்திலும் நாங்கள் ஆா்வமாக இருக்கிறோம். மத்திய பிரதேசத்தைப் போன்று மற்ற மாநிலங்களுடன் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஈடுபட ரயில்வே எதிா்பாா்க்கிறது.
வரும் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் மத்திய பிரதேசத்துக்கு ரூ.14,745 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன், மத்திய பிரதேசத்தில் ஆண்டுக்கு 29-30 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு வந்தது. தற்போது ஆண்டுக்கு 223 கி.மீ. வரை அமைக்கப்படுகிறது. இப்பணியின் வேகம் 7.5 மடங்கும், நிதி 23 மடங்கும் அதிகரித்துள்ளது.
மேலும், மத்திய பிரதேசத்தில் ரூ.1.04 லட்சம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு ரயில்வே திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன’ என்றாா்.