ARTICLE AD BOX
ஸ்பெயின் நாட்டின் தெற்கு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் பெய்த கன மழையை தொடர்ந்து நேற்று (மார்ச் 17) மலாகா நகரத்தின் அருகிலுள்ள காம்பனில்லாஸ் கிராமத்திலுள்ள ஆற்றின் கரைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகளால் அப்பகுதியில் வசிக்கும் 365 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இன்று (மார்ச் 18) கூறப்பட்டுள்ளது.
மலாகாவின் மோசமான வானிலையால் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட அண்டலூசியா மாகாணத்தின் உள்துறை அதிகாரி அண்டோனியோ சான்ஸ் கூறுகையில், அம்மாகாணத்திலுள்ள 19 ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ’ரெட் அலார்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 250 கிலோ எடையுடைய டிவிட்டர் இலச்சினை ஏலம்!
மேலும், அண்டலூசியா மாகாணத்தின் 40 நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதுடன், அங்குள்ள தண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2024 நவம்பரில் இதே மலாகா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெயத கன மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் சுமார் 233 பேர் பலியானார்கள். அதில் பெரும்பாலானோர் வேலனெசியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சியை சந்தித்த ஸ்பெயின் நாட்டில் 2 வாரங்களாக பெய்து வரும் கன மழையினால் அந்நாட்டின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.