இடுப்பு கிள்ளி நடிகர் விஜய்.. அண்ணாமலைக்கு கண்டனம்!!

8 hours ago
ARTICLE AD BOX

அண்ணாமலை ’இடுப்பு கிள்ளி நடிகர்’ என்று விஜய்யைப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மிகவும் அநாகரிகமானது. ஒரு நடிகர் என்பவர் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் கடமைப்பட்டவர். பல அசாதாரண தியாகங்களை அவர் செய்தே ஆக வேண்டும். உதாரணத்திற்கு எஸ்.ஏ.சி சொன்னதற்காக மாமியார் கதாப்பாத்திரத்துக்கு முதுகில் சோப் போட்டார். (பின் அதை ஒரு பேட்டியில், தான் மிகவும் ரசித்து நடித்த காட்சி என்று அவர் பேசியது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது)

போக்கிரியில் அசின் ஓடிவரும்போது கிரிக்கெட் பேட்டை வைத்து குறி பார்த்தார். அதே படத்தில் அசினின் ஜீன்ஸ் பின்புற பாக்கெட்டில் கைவிட்டார். சிவகாசி படத்தில் பெண் எப்படி உடை அணிய வேண்டும் என்றும், இப்படியெல்லாம் உடை அணிந்தால் பொறுக்கிப் பயல்கள் கேவலமான வேலைகளைச் செய்யத்தான் செய்வார்கள் என்றும் பாடம் எடுத்தார். ஜில்லா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வாலின் பின்புறத்தில் தன் ஐவிரல் ரேகையைப் பதித்தார். இப்படி எத்தனையோ மாஸ் ஆன சம்பவங்கள் உண்டு. இதெல்லாம் அவர் ஆசைப்பட்டு செய்ததில்லை.

இப்படியெல்லாம் படம் எடுத்தால் பொறுக்கிகள் ரசிப்பார்கள், பொறுக்கிப்பயல்கள் 100ரூ டிக்கெட்டை 1000ரூ கொடுத்து வாங்கிப் பார்ப்பார்கள் என தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியதால் செய்த தியாகங்கள்.  கட்சிக் கூட்டங்களில், திருவிழாக்களில் பொறுக்கிப்பயல்கள் சிலர் பெண்களில் இடுப்பைக் கிள்ளுவதுண்டு. அது பொறுக்கித்தனம், eve teasing. ஆனால் இது தொழில். இரண்டையும் ஒப்பிடுவது தவறு. இதே விஜய், பெண் ரசிகைகளுக்காக எத்தனையோ தத்துவப் பாடல்களுக்கு வாயசைத்துள்ளார். பெண்களை மதிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது சொல்லியுள்ளார். அதெல்லாம் ஏன் அண்ணாமலை கண்களுக்கு (காதுகளுக்கு) தெரியவில்லை?

அரசுகளை எதிர்த்து பலமாக வசனம் பேசியுள்ளார். மிகப்பெரிய சாம்ராஜ்ஜியங்களைத் தனி ஆளாக வீழ்த்தியுள்ளார். அதையெல்லாம் நிஜ அரசியல் வாழ்க்கையில் விஜய் செய்தால் அண்ணாமலை தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பார்? டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10ரூ அதிகமாக விற்றால் அறச்சீற்றம் கொள்பவர் அரசியல்வாதி விஜய். தன் படத்தின் 100ரூ டிக்கெட்டிற்கு 900ரூ ஏற்றி விற்றால் 100கோடி, 200கோடி என புளங்காங்கிதம் அடைபவர் நடிகர் விஜய்.

இந்த வித்தியாசம் கூட தெரியவில்லை என்றால் அண்ணாமலை எல்லாம் அரசியலில் இருப்பதே அசிங்கம்.  ஒருவர் தொழிலை வைத்து அவரை மதிப்பிடவோ அவமானப்படுத்தவோ கூடாது. நான் பல விஷயங்களில் விஜய்யுடன் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாலும், அண்ணாமலையின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  நன்றி.

- டான் அசோக்

Read Entire Article