ARTICLE AD BOX
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தன்னை பலரும் தெர்மாகோல் என கிண்டல் செய்யும் விதமாக கூறுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 18) நடைபெற்றது. இதில் முக்கிய பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அப்போது, "தி.மு.க ஆட்சி நிறைவு பெறுவதற்கு ஓராண்டு காலமே இருக்கும் நிலையில், ராமேஸ்வரத்தில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும்?" என்ற கேள்வியை செல்லூர் ராஜு முன்வைத்தார்.
இதற்கு, "பல 100 ஆண்டுகளுக்கு திராவிட மாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும். தமிழக முதலமைச்சர் ஆட்சியில் கோவை விமான நிலையம் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கோவைக்கு என்ன செய்தீர்கள்..? என்ன துரோகம் செய்தீர்கள் என்று கோவை மக்கள் முழுமையாக அறிவார்கள்
ஆட்சிக்கு வந்தவுடன் அதே கோவைக்கு சென்று வாக்களிக்காத மக்களும், ஏன் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று ஏங்கும் அளவுக்கு ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டு, கோவை விமான நிலைய நிர்வாக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார்.
இதைத் தொடரந்து, "விமான நிலையம் கட்டுவது ஜீபூம்பா வேலையா? பட்ஜெட் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "தூத்துக்குடி மற்றும் மதுரை விமான நிலைய பணிகள் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மேற்கொள்ளபட்டவை" எனக் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "எதிர்கட்சி தலைவர் தவறான தகவலை கூறுகிறார். இது தொடர்பான தகவலை என்னுடைய மானியக் கோரிக்கையில் தெரிவிக்கிறேன். தண்ணீரில் தெர்மாகோல் விடுவது ஈசி, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதைக் கேட்ட செல்லூர் ராஜு, "தெர்மாகோல், தெர்மாகோல்னு சொல்றீங்க. அதிகாரி சொல்லி தானே போனோம். ஆனால், இப்படி ஓட்டுகிறீங்களே; சரி பரவாயில்லை, ராஜா வாழ்க" எனக் கூறினார்.