ARTICLE AD BOX
நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள் (You only live once) என்கிற யோலோ கொள்கை தற்போது கொரியாவில் பிரபலம் அடைந்து வருகிறது. எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் தற்போதைய நிகழ்கால வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதைப் பற்றி இது குறிக்கிறது.
குடும்ப வாழ்க்கை;
பொதுவாக மனிதர்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு அப்படியே மாறிவிடுகிறது. பொறுப்பில்லாத ஆண் அல்லது பெண் கூட திருமணம் என்கிற பந்தத்திற்கு பிறகு தன் குடும்பம், தன் குழந்தை, மனைவி, கணவன் என்கிற வட்டத்திற்குள் வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களுக்காக சம்பாதிப்பது, சேமிப்பது, நேரம் செலவிடுவது, அவர்கள் பிள்ளைகளை வளர்ப்பது, தங்கள் துணையோடு காலம் செலவழிப்பது என்று திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபடுகிறது.
இளம் வயதினரின் கண்ணோட்டம்;
இன்றைய இளம் வயதினரின் கண்ணோட்டம் மாறிக்கொண்டே வருகிறது. தான், தனது, தன்னுடைய சந்தோஷம் என வாழ ஆசைப்படுகிறார்கள். கொரியாவில் எதிர்காலத்திற்காக சேமிப்பதை விட தற்போதைய வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்று இளைஞர்களும் இளம்பெண்களும் நினைக்கிறார்கள். தங்களுக்கு பிடித்த உணவு, உடை, பொழுதுபோக்கு, பிடித்த இடத்திற்கு செலவு செய்து பயணம் செய்தல் போன்றவற்றுக்கு தயாராக இருக்கிறார்கள்.
யோலோ வாழ்க்கை;
எதிர்காலம் பற்றி சிந்தித்து சேமித்து வைத்து நீண்ட கால பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. தென்கொரியாவில் கலாச்சார பொருளாதார மற்றும் ஊடகத்தாக்கங்களின் கலவையின் காரணமாக யோலோ வாழ்க்கை முறை பிரபலம் அடைந்துவிட்டது. இளைய தலைமுறையினர் இடையே தனிப்பட்ட மகிழ்ச்சி மற்றும் நிகழ்காலத்தை மையமாகக்கொண்ட வாழ்க்கைக்கு முன்னுரிமை தருகிறார்கள்.
பொதுவாக தென் கொரியாவில் குடும்பத்துடன் கூட்டாக வாழ்வது, நிலையான வேலையை செய்வது, திருமணம் செய்து கொள்வது, எதிர்காலத்திற்காக சேமிப்பது போன்ற எதிர்பார்ப்புகள் மற்றும் சமூக அழுத்தங்கள் சென்ற தலைமுறையில் நிறைய உண்டு. ஆனால் இன்றைய தலைமுறையினர் அந்த விதிமுறைகளை எதிர்க்கத் துவங்கினர். தம் உணவு, பயணம், வாழ்க்கை முறை போன்றவற்றில் புதுமைகளை புகுத்தினர்.
அங்கே வேலையில்லா திண்டாட்டம், நிலையான வருமானம் இல்லாதது, வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ப செலவுகளை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை, கட்டுப்படியாகாத வீட்டு வாடகை, அதிகமான பிள்ளைகளின் கல்வி செலவுகள் போன்ற சூழல் உள்ளது. அதனால் இளம் கொரியர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பதை விட நிகழ்காலத்தில் வாழ்க்கையை அனுபவிப்பதில் கவனம் செலுத்த தொடங்கியிருந்தனர்.
பொருளாதார பாதிப்புகள்;
இந்த வாழ்க்கை முறையால் தென்கொரியாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார பாதிப்புகளை தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. நுகர்வு முறைகள், வணிகப்போக்குகள் போன்றவற்றை கணிமாக பாதித்துள்ளது. நீண்ட கால சேமிப்பை விட தற்போதைய மகிழ்ச்சியான அனுபவங்களுக்கு கொரியர்கள் முன்னுரிமை அளிக்க ஆரம்பித்ததால் பயணம், உணவு, பொழுதுபோக்கு போன்றவற்றிற்கான செலவுகளை அதிகரித்தன.
பல இளைஞர்கள் நிகழ்காலத்தை அனுபவிக்க தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்வதால் வீட்டுக் கடன் அதிகரிப்புக்கு பங்களித்தது. தனிநபர்களின் செலவு அதிகரித்த போதும் வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. இதனால் அதிகமான பணவீக்கம், தேக்கமான ஊதியங்கள் என சீரற்ற பொருளாதார சூழ்நிலை, நிலவுகிறது.
ஒற்றை நபர் கொண்ட குடும்பம்;
தான், தன்னுடைய சந்தோஷம் என்று மட்டுமே இளைஞர்கள், இளம்பெண்கள் வாழ்வதால் ஒற்றை நபர் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே தனி நபர்களுக்கு ஏற்றவாறான பொருள்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்றவற்றுக்கான தேவை அதிகரிக்கிறது.
இங்கு திருமணம் என்பது மிகவும் காஸ்ட்லியான ஒரு விஷயம் என்கிற மனப்பான்மை தென்கொரிய இளைஞர்கள் மனதில் பதிந்துவிட்டது. ஆனால் நடுத்தர வயதினர்கள் மற்றும் முதியவர்களுக்கு, இளைஞர்களின் இந்தப் போக்கு கவலைகொள்ள செய்திருக்கிறது.