ARTICLE AD BOX
சர்ச்சைக்குரியவராகவே எப்போதும் இருந்துள்ளார் மம்தா குல்கர்னி! விளைவுகளை பொருட்படுத்தாமல் மிகவும் வெளிப்படையாக பேசக் கூடியவர். நிர்வாண போட்டோவுக்காக விமர்சிக்கப்பட்டவர். கும்பமேளாவில் துறவறம் மேற்கொண்ட மம்தா கடும் எதிர்ப்பு காரணமாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணம் என்ன..?
தமிழில் 1991-ம் ஆண்டு வெளிவந்த நண்பர்கள் என்ற படத்தில்தான் இவர் அறிமுகமானார். இந்தப் படத்தை நடிகர் விஜய் தயாரிக்க, அவரது தாய் ஷோபா சந்திரசேகர் இயக்கியிருந்தார்.அதன் பிறகு இந்தி, மலையாளம், கன்னடம், வங்காள மொழிப் படங்கள் என 40 க்கு மேற்பட்ட படங்களில் 10 ஆண்டுகள் நடித்தார். பின்னர் துபாய் சென்று சுமார் 12 ஆண்டுகள் வாழ்ந்தார்.
இவரது ஆண் நண்பர் விக்கி கோஸ்வாமி என்பவருடைய சகவாசத்தால் ஜூன் 2016 இல், சர்வதேச போதைப் பொருள் மோசடி மற்றும் கடத்தல் வழக்கில் சேர்க்கப்பட்டார். சமீபத்தில் தான் அதில் இருந்து நீதிமன்றம் நிரபராதி என அவரை விடுதலை செய்தது.
இவர் கும்பமேளாவில் கலந்து கொண்டது. துறவியாக அறிவிக்கப்பட்டது. அந்த மடத்தில் இவருக்கு ஒரு முக்கிய பதவியும் வழங்கப்பட்டது. அதன்படி அந்த கின்னர் அகாராவின் ஆச்சார்யா மஹாமண்டலேசுவரான லஷ்மி நாரயணன் திரிபாதி என்பவரால் மகா மண்டலேஷ்வரர் என அறிவிக்கப்பட்டார்.
இதன் விளைவாக அவருக்கு பாபா ராம்தேவ் உள்ளிட்ட பிரபல சன்யாசிகளிடம் இருந்து எதிர்ப்பு வெளிப்பட்டது. மீடியாக்கள் இவரது கவர்ச்சிப் படங்களை அவரது துறவற போட்டோவுடன் இணைத்து வன்மத்துடன் கேள்வி எழுப்பின.
இதவை யாவும் அந்த அகாராவில் சலசலப்பை உருவாக்கியது. இறுதியில் மம்தாவும், அவரை இணைத்துக் கொண்ட லஷ்மி நாராயண் திரிபாதி இருவருமே அந்த அகாராவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
லட்சுமி நாராயண் திரிபாதி ஒரு புகழ்பெற்ற திருநங்கை உரிமைகளுக்கான போராளியாக அறியப்பட்டவர். இவரும் பாலிவுட் நடிகையாகவும், பரதநாட்டிய நடனக் கலைஞராகவும், நடன இயக்குனராகவும் இருந்தவரே. பின்னர் தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி சுய முன்னேற்றத்திற்கான ஊக்கமளிக்கும் பேச்சாளராக அறியப்பட்டார். 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் திருநங்கையாக லட்சுமி நாராயண திரிபாதி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான பின்புலமுள்ள இவர் கின்னார் அகாடாவின் ஆச்சார்யா மகாமண்டலேஷ்வராக, திருநங்கை சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மரியாதை பெற்றவராக திகழ்ந்த நிலையில் இவருக்கும் மம்தா குல்கர்னிக்கும் பல வருட நட்பு இருந்துள்ளது.
இன்னும் சொல்வதென்றால் 2012 ஆம் ஆண்டு கும்பமேளாவிலேயே மம்தா கலந்து கொண்டு, துறவறம் மேற்கொள்ள ஆர்வம் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மம்தா குல்கர்னியின் பால்ய பருவத்தை பார்த்தால், அவர் ஒரு எளிய மராத்தா பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிறந்தது ஒரு மண் வீட்டில் தான்! குடும்ப வறுமை காரணமாக இவரது தாய் நடிகையாக முயன்றார். ஆனால், அந்த வாய்ப்பு இவரை தேடி வந்தது. குடும்பச் சூழலுக்காக விருப்பமின்றி நடிக்க வந்தேன் என்கிறார்.
சிறுவயதில் இருந்தே தனக்கு பக்தி மற்றும் ஆன்மீகத்தில் அளவிலா ஈடுபாடு இருந்ததாக மம்தா பல பேட்டிகளில் குறிப்பட்டு உள்ளார். இவர் நடிகையாக இருக்கும் போதே தன்னோடு ஒரு சிறிய பூஜா அறையையும் கையோடு எடுத்து சென்று விடுவார். சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே தன் பூஜை , புனஸ்காரங்களை முடித்து விடுவார்.
திருநங்கை கதாவச்சக் ஜகத்குரு ஹிமாங்கி சகி மா முன்னதாக குல்கர்னியின் நியமனம் குறித்து கோபத்தை வெளிப்படுத்தினார். அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கினார் மற்றும் அவரது கடந்த காலத்தை குற்றச் செயல்களுடன் இணைத்து பேசி விவாதத்தை கிளப்பினார்.
மம்தா குல்கர்னியின் நியமனத்திற்குப் பின்னால் உள்ள காரணத்தை லட்சுமி நாராயண் திரிபாதி விளக்கினார். குல்கர்னி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அகதாவுடனும் தன்னுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்தபடி தன்னை தயார்படுத்திக் கொண்டே வந்துள்ளார் என்றார்.
தனக்குத் தானே கங்கையில் பிண்டம் வைத்து தனது பிறவியை முடித்துக் கொண்ட மம்தா தற்போது கின்னர அகதாவின் மகாமண்டலேஷ்வராக தன்னை தகவமைத்துக் கொண்டதாகவும், அதை தான் அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார். அவருக்கு ஸ்ரீ யமாய் மம்தா நந்த்கிரி என்ற பெயரை சூட்டினார் லட்சுமி நாராயணன்.
ஆனால், கவர்ச்சியாக நடித்த நடிகை, போதை பொருள் வழக்கில் சம்பந்தப்பட்டவர், மது பழக்கம் கொண்டவர் என்ற அவரது கடந்த கால வாழ்க்கையை பொறாமை பிடித்த பிரபல ஆண் சாமியார்கள் கிளறினர். இது தான் அந்த கின்னர் அகாதாவிற்குள் சர்ச்சையானது.
கின்னர் அகாடாவின் மூத்த துறவி ஹிமான்ஷி சக்கி கிரி கூறும்போது, “மம்தாவுக்கு நிழல் உலக தாதாக்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது. அவர் தனது கணவருடன் போதைப் பொருள் கடத்தல் வழக்கிலும் சிக்கினார். சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். அவரைப் பற்றி சரியாக விசாரிக்காமல் அவருக்கு பதவியும் அளிக்கப்பட்டு விட்டது” என விமர்சித்தார்.
ஜுனா அகாடாவின் ரிஷி அஜய் தாஸ் இக்கருத்தை ஆதரித்தார்.
2015-ல் உஜ்ஜைன் கும்பமேளாவில் கின்னர் அகாடாவை இவர் தான் நிறுவினார். எனவே< நிறுவனர் என்ற முறையில் மம்தாவுக்கு அளிக்கப்பட்ட மகா மண்டலேஷ்வர் பதவியை நேற்று ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும் கின்னர் அகாடாவின் தலைமை பொறுப்பிலிருந்து லஷ்மி நாராயண் திரிபாதியை நீக்குவதாக அறிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பை லஷ்மி திரிபாதி ஏற்க மறுத்துள்ளார். லஷ்மி திரிபாதிக்கு பல மூத்த திருநங்கை துறவிகளுடன், அகில இந்திய அகாடாக்கள் சபையின் தலைவரான ரவீந்திர கிரியின் ஆதரவு கிடைத்துள்ளது.
“கின்னர் அகாடாவில் தலையிட அஜய் தாஸ் யார்?” என்று ரவீந்திர கிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், கின்னர் அகாடாவில் கோஷ்டி மோதல் உருவாகி விட்டது. இந்த இரு கோஷ்டியினரும் செய்தியாளர்களை சந்தித்து ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி வருமளவுக்கு நிலைமை சென்றுவிட்டது!
ஷியாமாய் மம்தாணந்த் கிரி என பெயரை மாற்றிக் கொண்ட மம்தாவுக்கு சுமார் ரூ.100 மதிப்பிலான கோடி சொத்துகள் உள்ளன. அதை பொருட்படுத்தாமல் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மீக நீண்ட கால நோக்கத்தையே அவர் நிறைவேற்றிக் கொண்டார். மம்தா குல்கர்னியை பொறுத்த வரை அவர் எல்லாவற்றையும் துறந்துவிட்டார். ஆனால், துறந்ததாகச் சொல்லி ஆன்மீகத் தலைவர்களாக அறியப்பட்ட சிலரால் தங்கள் மனதில் உள்ள அழுக்கை துறக்க முடியவில்லை. ஆண் என்ற அகந்தையை துறக்க முடியவில்லை.
Also read
மம்தா குல்கர்னியை கேள்விக்கு உள்ளாக்கும் பாபா ராம்தேவ் எத்தனையோ சர்சைகளில் சிக்கியவர் தான். பல ஆயிரம் கோடி பெறுமானமுள்ள பதஞ்சலி நிறுவனத்தை நடத்துபவர் தான்!
கடந்த காலத்தை ஆராய்வது என்றால், மிகப் பிரபலமான அந்தக் கால துறவிகளே கூட தேறமாட்டார்கள். மாற்றம் தானே வாழ்க்கை. அவரருக்குள் ஒரு மாற்றம் உருவான பிறகு, அந்த மாற்றத்திற்கு தக்க அவர்கள் இருக்கிறார்களா? என சிறிது கால அவகாசம் தந்து செயல்பாடுகளின் வழியே மம்தா விமர்சிக்கப்பட்டிருந்தால் அது நியாயமாக இருக்க முடியும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்