ARTICLE AD BOX
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று(பிப். 24) அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது அவரது தீவிர விசுவாசிகளாலும் கொண்டாடப்படுகிறது.
மைசூருவின் மாண்டியாவில் 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று பிறந்த ஜெயலலிதா, அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான நடிகர் எம்.ஜி.ஆருக்கு பின் அதிமுக பொதுச்செயலராக இருந்து தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாகக் கோலோச்சியவர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்(அமமுக)’ கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் சுயநலமிக்க துரோகக் கூட்டத்தை வீழ்த்திட உறுதியேற்போம் என்று சூளுரைத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: ‘இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி, தமிழக அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் அத்தியாயம், தமிழக மக்களின் துயர் துடைத்த தங்கதாரகை, தமிழக மக்களால் மனதார அம்மா என அழைக்கப்பட்ட வரலாற்றுத் தலைவி நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் இன்று.
எத்தனை இடர்பாடுகள் குறுக்கிட்டாலும், தடைகள் பல நேரிட்டாலும் அகிலமே வியந்து பாராட்டும் அளவிற்கு எண்ணற்ற நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்கள் பிறந்த இந்நாளில் மக்களை வஞ்சித்து ஏமாற்றும் திமுக அரசையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துப் பதிவில், வெற்றி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம் என்று சூளுரைத்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5 தனது 68-வது வயதில் மரணமடைந்தார். அவரது மரணத்தைப் பற்றிய சந்தேகங்களுக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் அவர் விட்டுச்சென்றுள்ள வெற்றிடம் சரியானதொரு ஆளுமையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!