ARTICLE AD BOX
பாட்னா,
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கோபாலி சவுக் பகுதியில் ஒரு பிரபல நகைக்கடை ஒன்று அமைந்திருந்தது. இந்த நகைக்கடைக்குள் இன்று காலை 11 மணியளவில் கையில் துப்பாக்கியுடன் அதிரடியாக புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த அனைவரையும் தாக்கினர்.
பின்னர் அந்த கடையின் ஷட்டரை பூட்டி அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். அந்த நகை கடையில் உள்ள சுமார் ரூ. 26 கோடி மதிப்புள்ள பொருட்களை கொள்ளையர்கள் அதிரடியாக கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து போலீசில் நகைக்கடை ஊளியர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். நகரம் முழுவதும் பாதுகாப்பை போலீசார் அதிகரித்தனர். அப்போது பர்ஹாரா அருகே சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் பைக்கில் இருவர் செல்வதை கண்டுபிடித்தனர்.
அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். பின்னர் அந்த இளைஞர்கள் கையில் இருந்த துப்பாக்கியால் சுட தொடங்கினர். இதனால் போலீசாருக்கும் கொள்ளையர்களுக்கும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
இந்த சண்டையில் இளைஞர்கள் இருவரின் காலிலும் குண்டடிப்பட்டது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சுமார் 70 சதவீதம் போலீசார் கையகப்படுத்தினர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட மற்ற 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.