ARTICLE AD BOX
எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளருமான நாறும்பூநாதன் தனது 66 வயதில் காலமானார்.
நாறும்பூநாதன் திருநெல்வேலி மாவட்டத்தில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) உள்ள கழுகுமலையைச் சேர்ந்தவர். இவர் திருநெல்வேலி மாவட்ட வரலாற்றையும், சாதனை மனிதர்களையும் எழுத்தில் பதிவு செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
1960ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி, இராமகிருஷ்ணன் - சண்முகத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். கல்லூரி படிப்பில் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவரின் மனைவி மனைவி, சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியை ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன் தீபக் கனடாவில் பொறியாளராக உள்ளார். நாறும்பூநாதன் வங்கி அதிகாரியாக 35 ஆண்டுகள் பணியாற்றி, இலக்கிய பணிகளைத் தொடர்வதற்காக விருப்ப ஓய்வு பெற்றவர்.
இதழ்கள் மற்றும் நாடகங்களில் பங்களிப்பு!
ஆரம்ப காலத்திலேயே இலக்கிய சிற்றிதழ்கள் மூலம் எழுத்தார்வம் பெற்று, சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுந்திவந்துள்ளார்.
கல்லூரி காலத்தில் மொட்டுகள் என்ற பெயரில் கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார். பின்னாளில் நண்பர்கள் நடிகர் சார்லி, வெள்ளதுரை ஆகியோருடன் இணைந்து எண்ணங்கள் என்ற இதழை நடத்தினார். மீண்டும் நண்பர்களுடன் த்வனி என்ற இதழை நடத்தியவர், புதுவிசை என்ற இதழில் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
இதழ்கள் மட்டுமல்லாமல் நாடகங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். நண்பர்களுடன் இணைந்து தர்சனா என்ற நாடகக் குழுவை உருவாக்கியுள்ளார். எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர் உள்ளிட்டோருடன் இணைந்து நடத்திய ‘ஸ்ருஷ்டி' வீதி நாடகக் குழு சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களைத் தமிழகம் முழுவதும் சென்று நடத்தியுள்ளார்.
நூல்கள்
இவரது 'கண் முன்னே விரியும் கடல்' தொகுப்பில் திருநெல்வேலியின் சாமானிய மக்கள் முதல் சாதனையாளர்கள் வரை பலரைப் பற்றி எழுதியுள்ளார்.
‘திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள்’ என்பது ஊரைப் பற்றிய இவரது மற்றொரு முக்கிய தொகுப்பு.
நாறும்பூநாதனின் சிறுகதை கனவில் உதிர்ந்த பூ பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா தன்னாட்சிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இவரது சில கட்டுரைகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் விக்கி தளத்தில் கூறப்பட்டுள்ளதன்படி, சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரை நூல்கள் என 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். கதை சொல்லியாக பல முக்கிய சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். தட்டச்சு கால கனவுகள் என்ற குறுநாவலையும் எழுதியுள்ளார்.
இலக்கியம், வரலாறு, சமூகம் சார்ந்த பல கட்டுரைகளை பல இதழ்களில் எழுதி வந்துள்ளார். யூடியூபிலும் கழுகுமலையும் வெட்டுவான் கோயிலும் என்ற தலைப்பிலும், நம்ப ஊர் என்ற தலைப்பிலும் திருநெல்வேலியை பற்றியும் பல வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் பல களப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். நாறும்பூநாதனின் இழப்புக்கு இலக்கியத்துறையைச் சேர்ந்த பல்வேறு ஆளுமைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவு - இவரது நூல்களும்.. விருதுகளும் ஒரு பார்வை!