ஆஸ்திரேலியாவை சேர்ந்த 91 வயது முதியவர் ஒருவர், இந்தியா மீதான தீராக்காதல் காரணமாக இறந்த பிறகு தன்னுடைய உடல் இந்தியாவில் புதைக்கப்பட வேண்டும் என உயிலில் கோரிக்கை விடுத்தார். முதியவரின் கோரிக்கையை ஏற்று அவர் இறப்பை தொடர்ந்து, அவரின் உடல் இந்திய கிறிஸ்தவ கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளது.

"இந்தியா மீது தீராக்காதல்"

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் டொனால்ட் சாம்ஸ். இவர், ஆஸ்திரேலிய தூதரகத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி. பிரிட்டிஷ் ஆட்சியின் போது இவரது தந்தை அசாமில் பணிபுரிந்தார். தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, டொனால்ட் சாம்ஸ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அசாமுக்கு செல்வார்.

தனது அனைத்து பயணங்களின் போதும், கொல்கத்தாவிலிருந்து பாட்னாவுக்கு கங்கை வழியாக கப்பலில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தியா மீது பேரன்பு கொண்டவராக இருந்துள்ளார். எவ்வளவு அன்பு இருக்கிறது என்றால், தனது இறுதிச் சடங்குகளை இந்தியாவில் செய்யுமாறு உயிலில் எழுதி வைக்கும் அளவுக்கு உள்ளது.

நெகிழ வைக்கும் ஆஸ்திரேலியா தாத்தா:

இந்த நிலையில், 12ஆவது முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் டொனால்ட் சாம்ஸ். 42 பேர் கொண்ட ஆஸ்திரேலிய குழுவுடன், கங்கை நதியில் ஒரு கப்பல் மூலம் சுல்தான் கஞ்சிலிருந்து பாட்னாவுக்குப் பயணம் செய்திருக்கிறார் சாம்ஸ்.

பயணத்தின் போது, சாம்ஸ் நோய்வாய்ப்பட்டு, முங்கரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மாவட்ட நிர்வாகம் அவரது மரணம் குறித்து இந்திய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தது.

ஆஸ்திரேலிய தூதரகம் மற்றும் அவரது மனைவி ஆலிஸ் சாம்ஸின் ஒப்புதலைத் தொடர்ந்து, அவரை முங்கரிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலிய தூதரகத்தின் அனுமதியுடனும், அவரது மனைவியின் வேண்டுகோளின் பேரிலும், கிறிஸ்தவ முறைப்படி இறுதிச் சடங்குகளை நடத்த ஒரு பாதிரியார் ஏற்பாடு செய்யப்பட்டார். பிரேத பரிசோதனை செய்யப்படாமல், இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. சுரம்பாவில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் முழு கிறிஸ்தவ முறைப்படி டொனால்ட் சாம்ஸ் அடக்கம் செய்யப்பட்டார்.

இந்தியா மீது தீராக்காதல் கொண்டு, தான் பிறந்த மண்ணை விட்டுவிட்டு இந்தியாவில் தனது உடல் புதைக்கப்பட வேண்டும் என உயில் எழுதி வைத்த டொனால்ட் சாம்ஸின் கதை அனைவரையும் நெகிழ வைக்கும் வகையில் உள்ளது.