ARTICLE AD BOX
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாப்கார்னின் மொறு மொறு சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் திரைப்பட அரங்குகளுக்குச் சென்றால் பாப்கார்ன் வாங்கி சுவைக்காதவர்கள் மிகக் குறைவு. பாப்கார்ன் எந்த நாட்டில் உருவானது? அது எப்படி உலகம் எங்கும் பரவியது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பாப்கார்னின் தொடக்கம்:
பாப்கார்ன் ஆயிரம் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான பூர்வீக அமெரிக்கர்களுடன் தொடர்புடையது. அவர்கள் சில சோள தானியங்களை சூடாக்கும் போது அவை மொறுமொறுப்பான பதத்தில் வெடித்து சுவையுடன் இருந்ததை கண்டுபிடித்தனர். 1800 களின் நடுப்பகுதியில் சர்க்கஸ் மற்றும் கண்காட்சிகளில் பாப்கார்ன் ஒரு பிரபலமான சிற்றுண்டியாக இருந்தது. அதன் தனித்துவமான சுவை மற்றும் மலிவு விலை காரணமாக மக்கள் அதை விரும்பி வாங்கி உண்டனர்.
பாப்கார்னுக்கு எதிர்ப்பு:
ஆரம்ப காலத்தில் தெருவில் அமைந்த கடைகள் மற்றும் கண்காட்சிகளில் பாப்கார்ன்கள் விற்கப்பட்டன. திரையரங்குகளுக்கு வெளியே வியாபாரிகள் பாப்கார்ன்கள் விற்ற போது தியேட்டர் உரிமையாளர்கள் அவற்றை எதிர்த்தனர். ஏனென்றால் ஆரம்பகாலங்களில் ஒலி இல்லாத ஊமைப்படங்கள் தான் திரையிடப்பட்டன. அப்போது மொறுமொறுப்பான பாப்கார்னை சத்தத்துடன் உண்ணுவது பார்வையாளர்களின் கவனத்தை சிதறடிப்பதாக நினைத்தனர். அதனால் அவற்றை திரையரங்குகளுக்கு வெளியே விற்பதைத் தடுத்தனர்.
திரையரங்குகளில் பாப்கார்ன்கள்:
1927 ஆம் ஆண்டு ஒளி திரைப்படங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வந்து சினிமா பார்க்கத் தொடங்கினர். அதிகமான மக்கள் கூட்டம் திரையரங்குகளுக்கு வந்ததால் வியாபாரிகள் திரையரங்குகளுக்கு வெளியே பாப்கார்ன்கள் விற்கத் தொடங்கினார்கள். இது திரையரங்குகளுக்குள் பாப்கார்ன் நுழைந்த பயணத்தின் தொடக்கத்தை குறிக்கிறது.
ஆரம்ப காலங்களில் தியேட்டர் உரிமையாளர்கள் மக்கள் பாப்கார்ன்களை உண்டு விட்டு அந்த பாக்கெட்களைக் ஆடம்பரமான கம்பளங்களில் குப்பைகளாக வீசி எறிந்து விட்டதால் பாப்கார்ன் விற்பனையை எதிர்த்தனர். ஆனால் அவை மக்களுக்கு மிகவும் பிடித்த உணவாக இருப்பதால் தாமே அவற்றை வாங்கி விற்பது லாபகரமானது என்பதை கண்டு கொண்டனர்.
திரையரங்குகளில் பாப்கார்ன் தயாரிப்பு:
சார்லஸ் கிரேட்டர்ஸ் வணிக ரீதியான பாப்கார்ன் இயந்திரங்களை கண்டுபிடித்ததன் மூலம் திரையரங்குகளில் நேரடியாக புதிய பாப்கார்னை பெருமளவில் உற்பத்தி செய்ய முடிந்தது. அதனால் மக்கள் வெளியே சென்று பாப்கார்னை வாங்குவதற்கு பதிலாக திரையரங்குகளிலேயே வாங்கத் தொடங்கினர். திரையரங்குக்குச் சென்றால் பாப்கார்ன் வாங்க வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது. மக்கள் தங்கள் அன்றாட கஷ்டங்களில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு வழியாக திரைப்படங்களை நினைத்தனர். மலிவு விலையில் கிடைத்த பாப்கார்ன்களின் சுவையும் மணமும் அவர்களுக்கு மிகப் பிடித்துப் போனது. நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் பாப்கார்ன் மலிவாக இருந்ததால் அதன் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்தது. தங்கள் வருவாயை அதிகரிக்கும் ஒரு உத்தியாக திரையரங்கு உரிமையாளர்கள் அரங்குகளுக்குள் பாப்கார்னை விற்கத் தொடங்கினார்கள்.
முதன்மை சிற்றுண்டி:
இரண்டாம் உலகப் போரின் போது சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் மிட்டாய் தயாரிப்பு மற்றும் விற்பனையை கடினமாக்கியது. எனவே தியேட்டர்களில் மிட்டாய் விற்பனைகள் வெகுவாகக் குறைந்து, பாப்கார்ன் முதன்மை சிற்றுண்டியாக முன்னேறியது.
படிப்படியாக பாப்கார்ன் திரையரங்குகள் மட்டுமல்லாது கடைகளிலும் விற்பனையாக தொடங்கின. மக்கள் அதனுடைய சுவையில் மயங்கினர். வீட்டு மைக்ரோவேவ் அடுப்புகளில் பாப்கார்னை தயாரிக்கத் தொடங்கினர்.
நூற்றாண்டுகளை கடந்த போதும் இப்போதும் தியேட்டர் சிற்றுண்டிகளில் பாப்கார்ன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சில இடங்களில் டிக்கெட் விலையை விட பாப்கார்னின் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். பெரிய மால்கள் மற்றும் பெரிய திரையரங்குகளில் பெரிய சைஸ் பாப்கார்ன்கள் அதிக விலையில் விற்கப்படுகின்றன. ஆனாலும் மக்கள் அவற்றை இன்னும் விரும்பி உண்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.