திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசி திருவிழா தொடங்கியது: 12ம் தேதி தேரோட்டம்

3 hours ago
ARTICLE AD BOX

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி மற்றும் மாசி திருவிழாக்கள், பிரசித்தி பெற்றவை. இந்தாண்டுக்கான மாசி திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டம் வெள்ளிப்பல்லக்கில் 9 சந்திகள் வழியாக கொண்டு வரப்பட்டு அதிகாலை 5.20 மணிக்கு கோயில் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில், காப்புகட்டிய முத்துக்குமாரசாமி பட்டர் மாசி திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரமாகி காலை 6.40 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் பெலி நாயகர் அஸ்திரதேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் வீதியுலாவும் நடைபெற்றது. 2ம் திருநாளையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கும், மார்ச் 9ம் தேதி 7ம் திருவிழா அன்று அதிகாலை 1 மணிக்கும், மற்ற நாட்களில் வழக்கம்போல அதிகாலை 5 மணிக்கும் கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 12ம் தேதி 10ம் திருவிழாவன்று நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுகிறது. 13ம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. 14ம் தேதி 12ம் திருநாளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசி திருவிழா தொடங்கியது: 12ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article