ARTICLE AD BOX
மணப்பாறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் நடந்துவரும் பாரத சாரண சாரணியர் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நாளையுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் இன்று மாலை நடைபெறும் நிறைவு விழா நிகழ்வில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று நண்பகல் திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் துரை வைகோ, அரசு அதிகாரிகள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர், விமான நிலையத்தில் வரவேற்பு கொடுத்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை நேரில் சந்தித்து பெற்றுக் கொண்டார்.
அதில் திருச்சி மாவட்டம், துறையூர் புத்தனாம்பட்டியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும், அபினிமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வம் என்பவர் அரசு கொடுக்கக் கூடிய உதவித்தொகையிலும், ஜெராக்ஸ் கடையில் கிடைக்கும் வருவாயிலும் வாழ்ந்து வருகிறேன் எனவும் தனது தொழில் அபிவிருத்திக்காக இன்வெர்ட்டர் பேட்டரி ஒன்றையும், புகைப்பட அச்சுப்பொறி கருவி ஒன்றையும் தனக்கு வழங்கி உதவிடுமாறு கோரிக்கை மனு அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துச் சென்றார்.
அதே போல ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் அருகே கள்ளிக்குடி பகுதியில் 2017 ல் கட்டப்பட்டு செயல்படாமல் இருக்கும் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தார்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், பாகவதர் மணிமண்டபங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மணிமண்டபம், அங்குள்ள நூலகத்தில் காவலர்கள் உள்ளிட்ட எந்த பணியாளர்களும் இல்லை என்பதை உணர்ந்த முதல்வர் மாவட்ட ஆட்சியரை அழைத்து கடிந்துக் கொண்டார். மேலும் பணியாளர்களும், நூலகத்தில் நூல்கள் இல்லாததை கண்டு அதிருப்தி அடைந்தார்.
பின்னர், ஆட்சியரை அழைத்த முதல்வர், மணிமண்டபங்களின் உட்புறப் பகுதிகளில் அவர்களது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்படங்களையும், ஓவியங்களையும் பெருமளவு வைத்திடவும், வெளியே உள்ள புதர்களை நீக்கி அங்கே பூச்செடிகளை நட்டு உரிய முறையில் பராமரித்திடவும் அறிவுறுத்தினார்.
முன்னதாக, திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரே ஒரு கோடியே 85 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீடு செலவில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரது மணிமண்டபங்களையும், அதே வளாகத்தில் ஒரு நூலகத்தையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்தாண்டு பிப்ரவரி 27ஆம் தேதி திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்