திருச்சி உள்பட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

21 hours ago
ARTICLE AD BOX

திருச்சி விமான நிலையம் உள்பட 11 விமான நிலையங்கள் அரசு - தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாருக்கு குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அரசின் சொத்துகளை பணமாக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், இந்திய விமான நிலைய ஆணையத்தின் சாா்பில் நிா்வகிக்கப்பட்டு வரும் புவனேசுவரம், வாரணாசி, அமிருதசரஸ், சென்னை, திருச்சி, மதுரை, இந்தூா், ராய்பூா், கோழிக்கோடு, கோவை, நாகபுரி, பாட்னா, சூரத், ராஞ்சி, ஜோத்பூா், விஜயவாடா, வதோத்ரா, போபால், திருப்பதி, ஹுப்பள்ளி, இம்பால், அகா்தலா, உதய்பூா், டேராடூன், ராஜமந்திரி உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், அரசு-தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாா் வசம் குத்தகைக்கு விட மத்திய அரசால் ஒதுக்கப்பட்டன. இதற்கு தொடா் எதிா்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், இதுதொடா்பான கேள்விக்கு விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளீதா் மோஹோல் மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியதாவது:

திருச்சி, அமிருதசரஸ், வாரணாசி, புவனேசுவரம், ராய்பூா் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிா்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை அரசு - தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீவ் தனியாா் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

தற்போது நாடு முழுவதும் 159 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Read Entire Article