ARTICLE AD BOX
செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் கலைஞர் கனவு இல்லம் தொகுப்பு வீடு திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணப்பாக்கம், பொன்விளைந்தகளத்தூர், பொன்பதற்கூடம் நல்லாத்தூர், நடுவுக்கரை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா நேற்று ஆய்வு செய்தார்.
மணப்பாக்கம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் அமைக்கும் பணியினை பார்வையிட்டார். அப்போது, ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து அகற்றுவோம், என தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, பொன்விளைந்தகளத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் பிரதம மந்திரி ஜென்மன் வீடுகள், கலைஞர் கனவு இல்ல வீடுகளை ஆய்வு செய்தார். பொன்பதற்கூடம் பகுதியில் வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நர்சரி கார்டனை பார்வையிட்டார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பழ மரங்கள், நிழல் தரும் மரங்களை நடுவதற்கு அறிவுரை வழங்கினார். பின்பு நல்லாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணிகள் ஆகியவற்றை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது 8 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும், என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
The post திருக்கழுக்குன்றம் ஒன்றிய ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.