ARTICLE AD BOX
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூட இதனை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். பீகார், கர்நாடகா, தெலுங்கானா மாநில அரசுகள் அங்கு சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடிந்துவிட்டன. ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக இன்னும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறது. அதற்கான அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது எனவும் கூறி வருகிறது.
இதனை விமர்சிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுகூட நடத்தவில்லை. அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டு, ஆளும் அரசின் சமூக நீதி வேடம் கலைகிறது என அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
சமூக நீதி வேடம் கலைகிறது
அதில், ” சுதந்திர இந்தியாவில் இதுவரை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதனால், இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது பல்வேறு தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பீகார், கர்நாடகா, தெலுங்கானா :
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் கூட, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். அதன் பிறகான கூட்டத்திலும் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றினோம். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அதனால் தான், பீகார், கர்நாடகாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்தனர். புள்ளி விவரங்களை கையில் வைத்துள்ளனர் . தெலுங்கானா மாநில அரசு ஐம்பது நாட்களில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை (Caste Survey) நடத்தி முடித்திருக்கிறது. அதனை சட்டசபையில் சிறப்பு அமர்வுக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவும் தொடங்கியுள்ளது.
இடஒதுக்கீடு வழிகாட்டி பெரியார் :
இப்படி இருக்க, தமிழ்நாட்டின் மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படவில்லை. சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு செயல்படுத்த தயங்குவது ஏன் என தெரியவில்லை. அரசியல் சாசனத்தில் இட ஒதுக்கீடு விஷயத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்ந்தவர் தந்தை பெரியார். ‘பெரியாரை எங்கள் தலைவர் தலைவர்களுக்கெல்லாம் தலைவர்’ என்று கூறும் தற்போதைய ஆட்சியாளர்கள் சமூகநிலையை காக்கும் செயல்பாடான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையும் முன்வைத்து வருகின்றனர்.
தெலுங்கானாவில் எப்படி சாத்தியம்?
சாதிவாரி கணக்கெடுப்பை தான் மத்திய அரசு நடத்த வேண்டும். அதற்கு முன்னதாக இருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆய்வு எனும் Caste Survey-வை நடத்தலாம். அதனை எப்போது ஆட்சியாளர்கள் நடத்த போகிறார்கள்? மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றால் தெலுங்கானா மாநில அரசுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமானது? இப்படி எத்தனை கேள்விகள் கேட்டாலும் தற்போதைய ஆட்சியாளர்கள் அவற்றை அலட்சிய போக்குடன் கடந்து சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ஆட்சியாளர்களின் பொய் வேடம்
சாதிவாரி கணக்கெடுப்பு விவாகரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் ஒரே நேர்கோட்டில் பயணித்து வருகின்றனர். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் ஒரே வழி, உண்மையான சமூக நீதி சமத்துவ நீதி வழங்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான முன்னோட்டமான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இனியும் தாமதப்படுத்தினால் தற்போதைய ஆட்சியாளர்களின் பொய் வேடம் தானாகவே கலையும் நாள் வெகு தொலைவில் இல்லை. ” என அந்த அறிக்கையில் தவெக தலைவர் விஜய் ஆளும் திமுக அரசை கட்சிப் பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்துள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) February 6, 2025