ARTICLE AD BOX
மதுரை,
மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தற்போது ஐகோர்ட்டுகளில் 12 நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்படுகின்றனர். குறிப்பாக, தென்மாவட்டங்களைச் சேர்ந்த பிரமலை கள்ளர், மறவர், புதர வண்ணார், ஆதிதிராவிடர் உள்ளிட்ட சில சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும். ஏற்கெனவே இது தொடர்பாக பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தொடர்ந்து இது குறித்து தமிழ்நாடு சட்ட அமைச்சரிடமும் வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.
சமூக நீதியை நிலை நாட்ட அரசும், சட்டத்துறையும் கவனம் செலுத்த வேண்டும். உரிய வழிகாட்டுதல் செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம். இந்தக் கோரிக்கையை நாங்களும் ஆதரிக்கிறோம். தென்மாவட்ட ஜனநாயக சக்திகள் இணைந்து மதுரையில் சமூக மதநல்லிணக்க பேரணிக்கு முயற்சி எடுத்துள்ளனர். வருகிற 9-ம் தேதி நடக்கும் இந்தப் பேரணிக்கு மதுரை மாநகர காவல் துறை உரிய அனுமதி மறுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. யாருடைய உணர்வுகளையும் தூண்டும் வகையில் நடத்தும் பேரணி அல்ல. யாருக்கும் எதிரானதும் இல்லை. காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்.
திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. எங்களுக்குக் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கட்டுக்கோப்புடன் இருக்கிறோம். இல்லாததை இட்டுக்கட்டி சிலர் பேசுகின்றனர். வெளிப்படையாகப் போராட்டம் நடத்துகிறோம். கருத்துகளைத் தெரிவிக்கிறோம். திமுக கூட்டணியில் எந்தவித நெருக்கடியும் எங்களுக்கு இல்லை. கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. அதுபோன்று கூட்டணியைக் காப்பாற்றும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.